“செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றியதே இவங்கதான்” – ஹெச்.ராஜா சொன்ன ரகசியம்!

செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளது. இதனிடையே செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இதயப் பிரச்னை வரும் அளவுக்கு அமலாக்கத் துறை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீப காலமாக மன அமைதி இல்லை என்பது அவர் பேச்சுகள் மூலம் தெரியவருகிறது. செந்தில் பாலாஜிக்கு இதயக் கோளாறு வரும் அளவுக்கு மத்திய அரசு துன்புறுத்தியுள்ளதாகவும், சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அங்குள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆகவே, எங்களது சீண்டல்களை எதிர்கொள்ளும் நிலையில் திமுக இல்லை.

இப்போது செந்தில்பாலாஜி மீது நடைபெறும் வழக்கு பாஜக ஆட்சியில் பதிவு செய்தது அல்ல. திமுக புகார் அளித்து தொடரப்பட்ட வழக்கு. அமலாக்கத் துறை பொய் வழக்குகள் போடாது. ஏனெனில் பொய் வழக்கு போட்டால் அவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை கிடைக்கும். செந்தில் பாலாஜிக்கு இதயக் கோளாறு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவி புரிந்த அமலாக்கத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றிதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, ஆளுநரை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட சொல்கிறார் உதயநிதி. ஐபிஎஸ் படித்துவிட்டு வந்து ஆளுநராக அமர்ந்துள்ளார் ஆர்.என்.ரவி. ஐபிஎஸ் தேர்வில் உதயநிதியால் 5 சதவிகித மார்க்கை வாங்க முடியுமா? உதயநிதி நாகரிகத்துடன் பேச வேண்டும். இல்லையெனில் தக்க பாடம் புகட்டுவோம். எங்கள் பாணியில் பதிலடி கொடுத்தால் உதயநிதியால் தாங்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.