பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மீண்டும் நடக்கிறது. நேற்று மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் நாளான இன்று போட்டி நடத்தப்படுகிறது. நேற்று இந்திய அணி விளையாடிய இடத்தில் இருந்து போட்டி ரிசர்வ் நாளில் நடக்க இருக்கிறது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம். 

இந்திய அணியைப் பொறுத்தவரை 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருக்கிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். விராட் கோலி கொழும்பு மைதானத்தில் ஏற்கனவே பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்த மைதானத்தில் மட்டும் அவர் இதுவரை மூன்று சதங்கள் விளாசியிருக்கிறார். அதிகபட்சமாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயசூர்யா ஆகியோர் இதே மைதானத்தில் நான்கு சதங்களை விளாசியிருக்கின்றனர். ஒருவேளை விராட் கோலி சதம் விளாசினால் இந்த மைதானத்துக்கான சாதனை பட்டியலில் இந்த ஜாம்பவான்களுடன் அவர் இணைவார்.  

தோனி – ராகுல் டிராவிட் சாதனை முறியடிக்கலாம்

இதற்கிடையில், ஆர் பிரேமதாசா மைதானத்தில் சதம் அடித்தால் ரன்களின் அடிப்படையில் எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் இந்த மைதானத்தில் அடித்திருக்கும் ரன்களையும் விராட் கோலி கடப்பார். விராட் கோலி இந்த மைதானத்தில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 103.80 சராசரியில் 519 ரன்கள் எடுத்துள்ளார். தோனி, டிராவிட் மற்றும் அசாருதீன் ஆகியோர் முறையே 568, 600 மற்றும் 616 ரன்கள் மைதானத்தில் உள்ளனர். ஒரே வொரு சதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் விளாசும்பட்சத்தில் மூன்று பேரின் சாதனையும் அவர் கடந்து செல்வார். விராட் கோலி இதனை செய்வாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.