இந்தியா – கனடா வர்த்தக பேச்சு நிறுத்திவைப்பு | India-Canada trade talks on hold

புதுடில்லி :இந்தியா – கனடா இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதத்தில் வருவதாக இருந்த கனடா குழுவின் பயணம் ரத்து செய்யப்
பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். நம் நாட்டுக்கு அடுத்தபடி யாக சீக்கியர்கள் இங்குதான் அதிகம் வசிக்கின்றனர்.
இந்நிலையில், பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைக்கும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகள், கனடாவில் உள்ள ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தின. கனடாவில் உள்ள இந்திய துாதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தின. மேலும், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் புதுடில்லியில் நடந்த, ‘ஜி – 20’ மாநாட்டுக்கு இடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை தனியாக சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் கடுமை யுடன் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்தியா – கனடா இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக, கனடாவின் குழு, அடுத்த மாதத்தில் இந்தியாவுக்கு வரவிருந்தது.
தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜி – 20 மாநாட்டுக்கு முன்னதாகவே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, ட்ரூடோ கூறியிருந்தார்.
கடந்த, 2010ல், இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக முதல் முறையாக பேசப்பட்டது.
அதன்பின், அந்தப் பேச்சில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்தாண்டில், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வேகமெடுத்தது. இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பிரச்னையில், இந்த பேச்சை கனடா நிறுத்தி வைத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.