ஸ்ரீநகர், : ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் நேற்று ஊடுருவ முயன்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை நம் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள எல்லை கோடு அருகே, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீசார், உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நம் எல்லை வழியாக ஊடுருவ முயன்றனர்.
இதை பார்த்த, பாதுகாப்புப் படையினர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேரின் உடலை மட்டுமே பாதுகாப்புப் படையினரால் மீட்க முடிந்தது.
மற்றொரு உடலை, மீட்க முயற்சித்தபோது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மூன்றாவது பயங்கரவாதியின் உடலை, மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளின் உடலை வைத்து, அவர்களின் அடையாளங்களை காணும் முயற்சியில் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
4வது நாளாக நீடிக்கும் தேடுதல் வேட்டை
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது, நேற்று நான்காவது நாளாக நம் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஹெலிகாப்டர், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் பல்வேறு பதுங்கு குழிகளை பயங்கரவாதிகள் அமைத்துள்ளதால், அங்கு குண்டுகளை வீசி, அவர்களை கண்டறியவும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த தேடுதல் வேட்டையை, ராணுவத்தின் வடக்குப் பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement