`Are You OK Baby?' Review: ஒரு குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு பெற்றோர்; சரியான அரசியலைப் பேசுகிறதா?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவி வித்யா (அபிராமி), அம்மா (கலையரசி) மற்றும் கை குழந்தையாக இருக்கும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் தொழிலதிபரான பாலன் (சமுத்திரக்கனி). அப்போது ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணனிடமிருந்து (லட்சுமி ராமகிருஷ்ணன்) வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஷோபாவின் (முல்லை அரசி) குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தத்தெடுத்தல்’ என்ற பெயரில் கடத்தி வைத்திருப்பதாக வித்யா மேல் குற்றச்சாட்டை வைக்கிறார் ராஷ்மி ராமகிருஷ்ணன். பதறும் வித்யா அதை மறுக்கிறார்.

ஷோபா யார், அந்தக் குழந்தை யாருடையது, பாலன் – வித்யா தம்பதி செய்தது தவறா, இறுதியில் அக்குழந்தை யாருடைய கைகளுக்குச் சென்றது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் `ஆர் யூ ஓகே பேபி’ (Are You OK Baby?) திரைப்படம்.

‘Are You OK Baby?’ Review

பிரதான கதாபாத்திரங்களாக சமுத்திரக்கனியும் அபிராமியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தாலும், அவர்களையும் தாண்டி நம்மைக் கவனிக்க வைப்பது முல்லை அரசிதான். தனியாளாகப் பல காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். ராஷ்மி ராமகிருஷ்ணன் என்ற பெயரில் ‘மரு வைத்து மாறு வேஷத்தில்’ (!) வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடக்கத்தில் திரையை ஆக்கிரமித்து சிறிது ரசிக்க வைத்தாலும் அடுத்தடுத்து வரும் தேவையில்லாத காட்சிகளால் சோதிக்கவே செய்கிறார்.

நிகழ்ச்சி இயக்குநராக வரும் பாவெல் நவகீதன் சில காட்சிகள் வந்தாலும் தன் நடிப்பால் தனித்து நிற்கிறார். வினோதினி வைத்தியநாதன், கலையரசி, அனுபமா குமார், விஜே ஆஷிக், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ‘முருகா’ அசோக், உதய் மகேஷ் எனத் துணை கதாபாத்திரங்கள் எந்த அழுத்தமும் தராமல் திரையில் வரிசை கட்டி நிற்க, இவர்களோடு கௌரவத் தோற்றத்தில் மிஷ்கினும் தலைகாட்டி விட்டுச் செல்கிறார்.

‘சொல்லாததும் உண்மை’ போன்ற ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகளுக்குப் பின்னால் உள்ள பரபரப்பைக் கடத்த கிருஷ்ணா சேகர் டி.எஸ்ஸின் ஒளிப்பதிவு உதவியிருக்கிறது. எது நிகழ் காலம், எது பின்கதை எனப் படம் முழுவதுமே நம்மைக் குழம்ப வைக்கிறது சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பு. இந்தக் குழப்பங்களைச் சீர் செய்து, காவல்துறை விசாரணை தொடர்பான காட்சிகளையும் செறிவாகத் தொகுத்திருந்தால் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்திருக்கும். இளையராஜாவின் வரிகள் மற்றும் இசையில், ஸ்வேதா மோகன் குரலில் ஒலிக்கும் ‘அன்னை தந்தை’ பாடல் மனதிற்குக் கொஞ்சம் இதம் தருகிறது. ஆனால், பின்னணி இசை இளையராஜாவின் பெயரை ஒலிக்கவில்லை. ஆங்காங்கே வரும் ‘ஆர்கெஸ்ட்ரா’ இசைக்கோர்வைகள் மட்டும் ஆறுதல் அளிக்கின்றன.

‘Are You OK Baby?’ Review

ஒரு குழந்தை, அதற்கு உரிமை கொண்டாடும் இரண்டு பெற்றோர்கள், இவ்விவகாரத்தைக் கையில் எடுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதன் பின்னணியும், இவ்விவகாரத்தை அரசின் அமைப்புகள் சட்டப்படி அணுகும் முறை, மறுபுறம் சில ஊடகங்கள் தங்கள் பரபரப்பிற்காக அணுகும் முறை எனத் தொடக்கத்திலேயே பல கிளைகளாகப் பயணிக்கிறது திரைக்கதை. இந்தக் `கிளைக்கதைகளின் நெரிசலால்’ திரைக்கதை பிரதானமாகப் பேசியிருக்க வேண்டிய `பயோலாஜிக்கல்’ தாயின் பாசம் மற்றும் உரிமைகளுக்கான காட்சிகள் குறைந்து விடுகின்றன.

பிரதான கதாபாத்திரங்களின் அறிமுகம் மற்றும் கதையின் மையத்தைப் பேசிய பிறகும், திரைக்கதையானது அடுத்தகட்ட நகர்வுகளுக்குச் செல்லாமல் ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்தே விளக்கிக் கொண்டிருக்கிறது. இது தொடங்கிய சில நிமிடங்களுக்கு மட்டுமே சுவாரஸ்யம் தருகிறது. அதைத் தொடர்ந்து ராஷ்மி ராமகிருஷ்ணனாக வரும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னைச் சுற்றியே காட்சிகளை அமைத்து தனக்குதானே பில்டப் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியால் ஏற்படும் தீய விளைவுகளுக்குத் தொகுப்பாளர் எந்த வகையிலும் காரணமில்லை, அவற்றுக்கு நிகழ்ச்சியின் இயக்குநரும் தொலைக்காட்சி நிறுவனமும்தான் காரணம் என்று விளக்கும்படியான காட்சிகளை அமைத்து (திணித்து) அவருக்காக அவரே வாதாடிக்கொண்டிருக்கிறார்.

மையக் கதைக்குக் கொஞ்சமும் தேவையில்லாத இவ்வாறான காட்சிகளால் திரைக்கதை வேறு பாதையில் குதித்து ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில், ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சியின் ‘அன்கட் வெர்ஷனா’ இது என யோசிக்க வைத்த திரைக்கதை பிறகு, இயக்குநரின் சுயபுராணமாக, கிட்டத்தட்ட ஒரு பயோபிக்காக மாறி நிற்கிறது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் கதையின் கருவைக் காத்து நிற்பதும், நமக்கு நம்பிக்கை தருவதும் முல்லை அரசி மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்புதான்.

ஒருவழியாகக் கதைக்கருவுக்குள் நுழைந்த பிறகும் சிக்கல்தான். தன்னிடம் இருக்கும் பணத்தால், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணின் குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக விலை கொடுத்து வாங்குகிறார் ஒரு பணக்காரர். அது பிரச்னையாகும்போது தன் சமூக/பொருளாதார பலத்தால் அப்பெண்ணிற்கு எதிராகக் களமிறங்குகிறார். இது அப்பட்டமான சுரண்டல் என்பதும், சட்டப்படி குற்றம் என்பதும் கண்கூடு. ஆனால், இந்தச் சுரண்டலைத்தான் `தாயுள்ளம்’, `குழந்தை மீதான ஏக்கம்’ என வெவ்வேறு பெயர்களில் பூசி மொழுகியிருக்கிறார் இயக்குநர்.

‘Are You OK Baby?’ Review

ஒருவர் பணக்காரராக இருப்பதற்காகவும் அப்பணத்தால் உருவான அவரின் சமூக அந்தஸ்திற்காகவும் அவர் சட்டரீதியாகக் குற்றவாளியாக இருந்தாலும், அவரின் குற்றத்திற்கு நியாயம் கற்பிக்க ஓடியோடி காட்சியமைத்த இயக்குநரால், சுரண்டலுக்கு உள்ளான பெண்ணின் குரலையும் உரிமையையும் பேச ஒரு உருக்கமான காட்சி கூட வைக்க முடியாமல் போனதுதான் பெரும் சோகம். இந்த நேர்மையின்மை திரைக்கதையைப் பலியாக்க, படம் தள்ளாடியே இறுதிக்காட்சியை நெருங்குகிறது.

இறுதிக்காட்சியிலும் ஒரு பெரிய அபத்தத்தை ‘தாய்ப் பாசம்’ என்ற பெயரில் பரப்புரை செய்கிறார். அதைப்பற்றி விளக்கி எழுதுவது நம்மை மேலும் மன உளைச்சலுக்கே தள்ளும் என்பதால், ‘எழுதாததும் அபத்தம்’ எனச் சுபமிடுவதே நலம்.

சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் `பாதுகாப்பான’ நிலையில் இருப்பவர்களையும், அவற்றின் ரீதியில் ஒடுக்கப்படுபவர்களையும் இத்திரைப்படம் சித்திரிக்கும் முறையைப் பார்த்தால், சமூகத்தைப் பற்றிய சரியான புரிதல் இந்த எழுத்தில் இல்லை என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.