முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றும் வசதி: சேலம் கோட்டத்தில் 6 மாதங்களில் 126 பேர் பயன்

கோவை: ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? என்பது குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், பலர் டிக்கெட்டை ரத்து செய்துவிடுகின்றனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றித்தரும் வசதி ரயில்வேயில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மட்டும் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 பேர், கோவையில் 30 பேர், சேலத்தில் 27 பேர், கோவை வடக்கு ரயில்நிலையத்தில் 19 பேர் உட்பட சேலம் கோட்டத்தில் மொத்தம் 126 பேர் பயன்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தனிப்பட்ட நபர் ஒருவர் பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் அளித்து, தங்கள் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு பயண முன்பதிவை மாற்றித்தரலாம்.

இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குமுன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாகச் செல்ல நினைத்தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். தேசிய மாணவர் படையில் (என்சிசி) உள்ள மாணவர்கள் குழுவாக பயணிக்க முன்பதிவு செய்து, யாரேனும் வர இயலாவிட்டால, சக மாணவருக்கு பயண டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் கட்டணம் இல்லை: இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.

முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.