கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு விமான டிக்கெட் பதிவு செய்தவர்கள் தவிப்பு

புதுடெல்லி: கனடாவில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியதால், விமான டிக்கெட் வாங்கிய பயணிகள் தவித்து வருகின்றனர்.

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம்தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த மாதம் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்தியாவில் உள்ள கனடா அதிகாரி வெளியேற மத்தியஅரசு உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கனடாவிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்ய விமான டிக்கெட் முன்பு பதிவு செய்திருந்தவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கான ஆவணமாக விசா உள்ளது. விசா பெறுவதற்கு முன்பாகவே விமானத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதை பயணிகள் பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். விமானங்களில் பயணத் தேதிக்கு பல நாட்களுக்கு முன்பாக குறைந்த விலையில் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இதனால் பயணிகள் விசா பெறுவதற்கு முன்பாகவே டிக்கெட் பதிவு செய்துவிடுகின்றனர். பயணத் தேதி நெருங்கி வருகையில் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

தற்போது இந்திய அரசு கனடாவிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால், வரும் மாதங்களில் இந்தியா வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் பயணம் செய்வது தடைபட்டுள்ளது.

கனடாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்ய விமானக் கட்டணம் ரூ.1 லட்சம் வரையில் உள்ளது.

ஏர் இந்தியா, ஏர் கனடா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயண தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால், பயண தேதியை மாற்ற வாய்ப்பு வழங்காத விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் தொகை முழுவதுமாக இழக்கும் சூழலில் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.