போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாபர் அசாம், “எங்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிக்காட்டி ஹீரோக்களாக மாறப்போகிறோம்” என்றார். ஆனால், அவர் பேசியதற்கு மாறாகத்தான் போட்டியில் நடந்து கொண்டிருக்கிறது. அஹமதாபாத்தில் நடந்து வரும் போட்டியில் பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இந்திய அணி அசத்தியிருக்கிறது.

“நாங்களும் முதலில் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்ய நினைத்தோம்!” என அதிருப்தியுடன்தான் பாகிஸ்தானை பேட்டிங் ஆட வைத்தார் பாபர் அசாம். ஆனாலுமே, தொடக்கத்தில் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் வகையில்தான் ஆடினார்கள். நின்று நிதானமாக பேட்டிங்கைத் தொடங்கி மிடில் ஓவர்களில் சீராக வேகமெடுத்து கடைசியில் அதிரடியாக முடிப்பதுதான் பாகிஸ்தானின் பாணி. இன்றும் அதையேத்தான் செய்ய நினைத்தார்கள். ஆனால், இடையிலேயே சறுக்கிச் செல்ல வேண்டிய பாதையிலிருந்து மாறிச் சென்றது பாகிஸ்தான்.

ஷஃபீக், இமாம் உல் ஹக் இருவருமே நிதானமாக தொடங்கியிருந்தனர். “இருவரும் டிஃபண்ட் செய்தாலும் அதிலும் ஒரு இண்டண்ட் இருக்கிறது. இருவரும் பாசிட்டிவ்வாக ஆடி வருகிறார்கள்” என ரவிசாஸ்திரி கமென்ட்ரியில் இவர்களைப் புகழ்ந்திருந்தார். பும்ரா, சிராஜ் என இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர்களாலும் இவர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்த முடியவில்லை. சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து அசத்தியிருந்தார் இமாம் உல் ஹக்.
அப்படியே சீராக முன்னேறிக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியை சிராஜேதான் முறிக்கவும் செய்தார். வழக்கமான வேகத்தை விட மெதுவாக க்ராஸ் சீம் டெலிவரியாக வீசி சஃபீக்கை lbw ஆக்கினார். இன்னொரு ஓப்பனரான இமாமையும் அடுத்த சில ஓவர்களிலேயே ஹர்திக் பாண்டியா வீழ்த்தியிருந்தார். ரொம்பவே கட்டுக்கோப்பாக யோசித்து யோசித்து டெஸ்ட் போட்டியை போல பேட்டை விட்டுக் கொண்டிருந்த இமாம் ஒரு ஒயிட் டெலிவரிக்கு பேட்டை விட எட்ஜ் ஆகி கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பிறகுதான் பாகிஸ்தான் அணியின் அபாயகரமான இணையான பாபர் அசாம் – ரிஸ்வான் இணை கைகோர்த்தது. 13வது ஓவரில் க்ரீஸூக்குள் வந்த இந்தக் கூட்டணி 30 வது ஓவரில்தான் பிரிந்தது. இடைப்பட்ட இந்த 16 -17 ஓவர்களில் இந்தக் கூட்டணி வழக்கம்போல தங்களின் க்ளாஸான ஆட்டத்தை ஆடியது.

ஹர்திக் பாண்டியா, ஷர்துல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சிராஜ் என 5 பௌலர்கள் இந்த ஓவர்களை வீசியிருந்தனர். அவசரமே படாமல் நிதானமாக டிஃபன்ஸ் ஆடி ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரி அடிக்க முற்பட்டனர். இதனால் ஸ்கோர் சீராக ஓவருக்கு 4 ரன்கள் வீதமாக உயர்ந்து கொண்டே இருந்தது. நன்கு செட்டிலாகிய இந்தக் கூட்டணி கொஞ்சம் அச்சுறுத்தவே செய்தது. ஆனால், நிதானத்தைக் குறைத்து அடுத்து கியருக்கு மாறலாம் என இந்தக் கூட்டணி முடிவெடுத்த தருணத்திலேயே இந்தக் கூட்டணியை முறித்துவிட்டனர் இந்திய பௌலர்கள்.
28, 29, 30 இந்த மூன்று ஓவர்களில் 25 ரன்களை பாகிஸ்தான் எடுத்திருந்தது. அசாமும் ரிஸ்வானும் சீறிப்பாயத் தொடங்கியிருந்தனர். சரியாக இந்தச் சமயத்தில் 30வது ஓவரில் மீண்டும் ஒரு மெதுவான பந்தில் பாபர் அசாமை பீட்டன் ஆக வைத்து போல்டாக்கினார் சிராஜ். இந்தியாவுக்காக முக்கியமான திருப்புமுனைகளையெல்லாம் சிராஜ்தான் இன்றைக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

குல்தீப் யாதவும் ஒரே ஓவரில் சாத் ஷகீலின் விக்கெட்டையும் இஃப்திகார் அஹமதுவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்ததாக மீண்டும் பந்தைக் கையிலெடுத்த பும்ரா தனது பங்குக்கு மிக முக்கிய விக்கெட்டான ரிஸ்வானின் விக்கெட்டையும் வீழ்த்தினார். வெறும் 6 ஓவர்களில் தங்களுடைய மிக முக்கியமான விக்கெட்டுகள் அத்தனையையும் பாகிஸ்தான் இழந்தது. பாகிஸ்தானின் பயணம் திசைமாறியது. அதுவரை சமமாகச் சென்று கொண்டிருந்த ஆட்டம், அப்படியே பாகிஸ்தானிடமிருந்து நழுவி இந்தியாவிடம் வந்து சேர்ந்தது.

வரிசையாக விக்கெட்டுகள் சரிய 43.5 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 36 ரன்களுக்குக் கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா என இந்தியாவின் 5 பௌலர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். பாகிஸ்தான் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடிய போட்டிகளிலேயே இந்தப் போட்டியில்தான் சுமாராக ஆடியிருக்கிறது. அஹமதாபாத்தில் ஹீரோக்களாக மாற வேண்டும் என நினைத்தவர்கள் இப்படியொரு ஆட்டத்தை ஆடியது பாகிஸ்தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.