“40 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயார்” – பிரேமலதா விஜயகாந்த்

அருப்புக்கோட்டை: “40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அன்னதானத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் கட்சி தொடக்க நாளை முன்னிட்டு பூர்விக கிராமம் என்பதால் இங்கு 51 அடி உயரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்துள்ளேன். எங்களது பூர்விக கிராமத்தில் புரட்டாசி 40ஆவது சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளேன். இங்கு கட்சியின் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. மேலும், இங்கு உள்ள எனது மாமனாரின் சொந்த இடத்தில் ஊர் மக்களுக்காக மண்டபம் ஒன்றை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கும்.

தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி, யார் வேட்பாளர், எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்ற அறிவிப்பை ஜனவரியில் அதிகாரபூர்வமாக கேப்டன் அறிவிப்பார். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஜனவரியில் தேர்தல் குறித்து கேப்டன் அறிவிப்பார். 40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.

கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க முடியவில்லை. காவிரி பிரச்சினையில் உரிமையை பெற முடியவில்லை. லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது. சாலைகள் சரியில்லை, விவசாயம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இந்த கடமை உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை. தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு தான் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை திமுகவிலும் அதிமுகவிலும் கொடுக்கப்படவில்லை. உரிமைக்காக போராட்டம் நடத்தினால் காவல் துறை மூலம் குண்டுக் கட்டாக தூக்கி இந்த அரசு அவர்களை அப்புறப் படுத்துகிறது. எங்கு இருக்கிறது பெண் உரிமை? உரிமைக்காக போராடுபவர்களுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். ஹிட்லர் போல் ஆட்சி நடத்தக் கூடாது.

டாஸ்மாக் விற்பனைக்கு அரசு டார்கெட் விதிக்கிறது. தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அமைச்சர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெகத்ரட்சகன் வீட்டில் கட்டு கட்டாக பணம், நகைகள், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் சம்பாதிக்க அரசியலை ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள். அடுத்த தேர்தலுக்கான அரசியல்தான் செய்கிறார்களே தவிர, அடுத்த தலைமுறைக்கான அரசியலை யாரும் செய்வதில்லை.

இஸ்ரேலில் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தேமுதிக சார்பில் மாநாடு நடத்த உள்ளோம். பொதுக்குழு, செயற்குழு கூட்டமும் நடத்த உள்ளோம். அதில் விஜயகாந்த் கலந்து கொள்வார்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.