“ சென்னை சங்கமத்தை நடத்திய தங்கை, இப்போது இந்திய சங்கமத்தை நடத்தியிருக்கிறார்!" – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் அக்டோபர் 14 அன்று, தி.மு.க மகளிரணி சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறும் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து முக்கிய பெண் தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து, இன்று மாலை ஐந்து மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது.

மகளிர் உரிமை மாநாடு

அப்போது, மேடையில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மெகபூபா முஃப்தி (காஷ்மீர் முன்னாள் முதல்வர்), லேஷி சிங் (பீகார் அமைச்சர் – ஐக்கிய ஜனதா தளம்), ராக்கி பிர்லா (டெல்லி துணை சபாநாயகர் – ஆம் ஆத்மி), ஆனி ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் – தேசிய மகளிரணி பொதுச் செயலாளர்), சுபாஷினி அலி (சிபிஎம் – மைய குழு உறுப்பினர்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி எம்.பி – அகிலேஷ் யாதவ் மனைவி) ஆகியோருக்கு ஸ்டாலினும், கனிமொழியும் மேடையில் நினைவுப்பரிசு வழங்கினர்.

பின்னர் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, “ `செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்து தேன் வந்து பாயுது காதினிலே’. தேன் போன்ற இனிமையான மொழி தமிழ். மிகவும் அழகான மொழி. அதிர்ஷ்டவசமாக தமிழகத்தை சேர்ந்த எம்பி-கள் பாராளுமன்றத்தில் என் அருகில் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே ஒரு சீட்டு எங்களுக்கு தமிழகத்தில் வழங்க வேண்டும். பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்களால் இது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சுப்ரியா சுலே – மகளிர் உரிமை மாநாடு

மொழியை நேசிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். பெண்களின் உரிமைக்காக கனிமொழி பாராளுமன்றத்தில் பாஜக-வை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார். மகாராஷ்டிராவுக்கும் தமிழகத்திற்கும் ஆன உறவு மிகவும் ஆழமானதாக இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு முதல் ஆளாக வந்தவர் ஸ்டாலின். சென்னையில் இருக்கும் மல்லிகைப்பூ மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போது இரண்டு கிலோ மல்லிகை பூவை வாங்கி செல்வேன்” என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் பெண்கள் மாநாடாக அல்ல, இந்தியாவின் பெண்கள் மாநாடு இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சென்னை சங்கமத்தை நடத்திய தங்கை கனிமொழி, இப்போது இந்திய சங்கமத்தை நடத்தியிருக்கிறார். 2004-ல் இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றார் கருணாநிது. பாஜக-வை தோற்கடிப்பது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளுடைய கடமை. பாஜக ஆட்சியில் அனைத்து மக்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கிறது.

மகளிர் உரிமை மாநாடு

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சி கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி முயன்று கொண்டிருக்கிறார். அது எதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கும். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என ஏமாற்றி வருகிறார்கள். ஆனால், அது உண்மையில் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டத்தை பாஜக இருக்கிறது. கப்சா சட்டத்தை மோடி இயற்றிருக்கிறார்.

2029, 2034-ல் தான் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால். 2024-க்கு பிறகு மோடி ஆட்சியே இருக்காது. பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மேலும் இந்த சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கவில்லை. அப்படி வழங்கினால்தான் அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் ஒலிக்கும். ஆனால், அது ஒலிக்கக் கூடாது என்று தான் பாஜக நினைக்கிறது. இது பாஜக-வின் அரசியல் சதி. இதை சுட்டிக் காட்டினால் பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துகிறோம் என்று மோடி அள்ளிவிடுகிறார்.

மகளிர் உரிமை மாநாடு

இடஒதுக்கீடு கேட்பது என்பது சாதி ரீதியாக பிரிப்பதற்கு அல்ல, அனைத்து மகளிரும் எல்லா விதமான உரிமைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதை விட்டுக் கொடுத்தால் அடுத்தடுத்து சமூக நீதியை காவு வாங்கி விடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் சமூக நீதியை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. சமூக நீதியின் குரலைத்தான் ராகுல் காந்தி தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி. சமூக நீதி, மதசார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல் என்ற கோட்பாடுகளைக் கொண்டதாக இந்த கூட்டணி அமைந்திருக்கிறது.

மகளிர் உரிமை மாநாடு

இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் மகளிருக்கான உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் பரவும் மகளிர் உரிமை பெற்ற நாள் நிச்சயம் அமையும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கக்கூடிய இந்த மாநாட்டை நடத்தி காட்டிய என் அருமை தங்கை கனிமொழிக்கும், அவருக்கு துணை நின்ற மகளிரணிக்கும் வாழ்த்துக்கள். இந்தியா வாழ்க, இந்தியா கூட்டணி வெல்க.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.