இந்தியா – பாகிஸ்தான் மோதிய உலகக்கோப்பை போட்டி அஹமதாபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஐ.சி.சி-யையும் பி.சி.சி.ஐயும் விமர்சித்துப் பேசிய சம்பவம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்திருந்த மிக்கி ஆர்தரிடம், “அஹமதாபாத்தில் 1,30,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். இது உங்களின் ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா?” என ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு மிக்கி ஆர்தர்,
“நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் ஐசிசி தொடர் போலவே இன்றைய போட்டி இல்லை. ஏதோ பிசிசிஐ நடத்தும் இருதரப்பு தொடர் போலத்தான் இருந்தது. ஒருமுறை கூட `தில் தில் பாகிஸ்தான்’ (பாடல்) ஒலிக்கப்படவில்லை. அது உளவியல் ரீதியாக எங்களைப் பாதித்தது.

ஆனால், தோல்விக்கு இதனை ஒரு காரணமாகச் சொல்லித் தப்பிக்க விரும்பவில்லை. எங்களுக்கு அந்தந்தந்த தருணங்கள்தான் முக்கியம். நாங்கள் அடுத்த பந்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் வைத்திருப்போம்” என்றார்.
இதற்கு, “ஒரு உலகக்கோப்பைப் போட்டி இப்படி நடைபெறுவது சரிதானா? நாம் இதையெல்லாம் அனுமதிக்கலாமா?” என ஒரு பத்திரிகையாளர் துணைக் கேள்வியை வீசினார். அதற்கு,
“இந்த விஷயத்தில் நான் இப்போதைக்கு எதுவும் பேச முடியாது என நினைக்கிறேன். மேலும், அப்படி பேசி எனக்கு அபராதம் விதிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை” என்றார் மிக்கி ஆர்தர்.

மேலும் பேசியவர், “முழுமையாக எல்லாவிதத்திலுமே நாங்கள் கொஞ்சம் சறுக்கலான பெர்ஃபார்மென்ஸைத்தான் கொடுத்திருக்கிறோம். பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானின் அணுகுமுறை மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதுமே ஒரு விஷயத்தை இரண்டு விதமாக அணுக முடியும். இப்படி ஆடுவது அவர்களின் ஸ்டைல். நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை பில்ட் செய்து கடைசியில் வேகமாக ரன் எடுப்பார்கள். ஆட்டத்தை க்ளாஸாக அனுபவித்து ஆடுகிறார்கள். அவர்களின் இந்த அணுகுமுறை அணிக்குப் பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது” என்றார்.

இறுதியாக, “இந்தியாவை மீண்டும் இந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்” என்றார்.