தெலுங்கானாவில் அதிர்ச்சி: அரசு தேர்வு தள்ளி வைப்பால் மாணவி தற்கொலை; அறிக்கை அளிக்க கவர்னர் உத்தரவு

ஐதராபாத்,

தெலுங்கானாவில் அசோக் நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் பிரவலிகா (வயது 25). தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இதற்காக வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இதனால், பிரவலிகா கவலையில் இருந்துள்ளார். தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தி பரவியதும், மாணவர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். அதில், மேற்குறிப்பிட்ட விவரங்களை அந்த மாணவி தெரிவித்து உள்ளார். இதனால், ஆளும் அரசுக்கு எதிராக பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. லட்சுமண் இரங்கல் தெரிவித்ததுடன், தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைக்கப்படுவதும் என நடந்துள்ளது. இதனால், பல மாதங்களாக தேர்வுக்கு தயாராகி வந்த, பிரவலிகா தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதற்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 48 மணிநேரத்திற்குள் சம்பவம் பற்றி ஒரு விரிவான அறிக்கையை அளிக்கும்படி முதன்மை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.