சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரப்பட்டினம் சிறந்தது: முதல்வர் சந்திப்புக்குப்பின் இஸ்ரோ தலைவர் பேட்டி

சென்னை: “தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக,அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறந்ததாக இருக்கும்” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகம் இயங்கி வருகிறது. அங்கிருந்துதான், ராக்கெட்டுக்கான உதிரி பாகங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அதேபோல அங்கிருந்துதான் திரவ இன்ஜின் சோதனை உள்ளிட்ட சிக்கலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறகு அங்கிருந்துதான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருகிறது. அவை பற்றி ஆலோசித்தேன். மேலும், இஸ்ரோவில் நடந்துவரும் பணிகள் குறித்து முதல்வரிடம் கூறினேன். அவரும் அதுகுறித்து அறிந்துள்ளார். இஸ்ரோவின் முன்னெடுப்புகளுக்கு உதவுவதாக அவரும் கூறினார். நாட்டின் விண்வெளி சார்ந்த பணிகளுக்கு தமிழகத்தின் பங்களிப்பு பெருமையளிக்கிறது” என்றார்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஏவுதளம் அருகே இலங்கைத் தீவு இருப்பதால், அங்கிருந்து ஏவப்படும் அனைத்தும் அந்த தீவைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு சுற்றிச் செல்லும்போது, ராக்கெட்டின் பேலோட் திறன் குறைந்து விடுகிறது. இதனால், சிறிய வகை ராக்கெட்டுகளை அங்கிருந்து ஏவுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்கு தென் பகுதிதான் சிறந்தது.

கன்னியாகுமரியிலிருந்து அவ்வகை ராக்கெட்டுகளை ஏவினால், அது சிறந்ததாக இருக்கும். கன்னியாகுமரியில் அவ்வளவு பெரிய இடம் இல்லை. எனவே, தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறப்பனதாக இருக்கும்” என்றார்.

நிலவுக்கு மனிதரை அனுப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “சந்திராயன்-3 தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவத்தின் அடிப்படையில், அடுத்தடுத்த தரையிறக்கம் நடைபெறும். அங்கிருந்து மாதிரிகள் திரும்பி வருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரோபாட் அங்கிருந்து திரும்பி பூமிக்கு வரவேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். இதற்காக பெரிய அளவிலான ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.

தற்போது இருக்கும் ராக்கெட்டைக் கொண்டு மனிதரை அங்கு கொண்டு செல்வதற்கான வசதிகள் இருக்காது. இதுவெறும் 4.5 டன் எடை கொண்டதுதான். மனிதர்களைக் கொண்டு செல்வது என்றால், 12.5 டன் எடை கொண்ட ராக்கெட்டாக இருக்க வேண்டும். அந்த ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இவையெல்லாம் 10,12 ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டால், மனிதர்களை அங்கு கொண்டு செல்லும் நிலையை எட்டிவிடலாம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவை சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.