இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டியின் முந்தைய நாள் அது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் பத்திரிகையாளர் அறையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட். அப்போது அவரிடம் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. “நாளை இங்கிலாந்தை உங்களால் அப்செட் செய்ய முடியுமா?” ஒரு நொடி தாமதம் கூட இல்லாமல்,

“எந்த அணியையும் வீழ்த்தும் திறன் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறது. கடந்த போட்டிகளில் வெற்றியை நெருங்கி சென்றிருக்கிறோம். எல்லைக்கோட்டை மட்டும்தான் கடக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக அழுத்தத்தைக் கொடுத்து அதை நிகழ்த்துவோம்!” என்றார். ட்ராட்டின் வார்த்தைகள் அப்படியே பழித்திருக்கின்றன. நடப்பு உலகக்கோப்பையின் முதல் அப்செட்டை ஆப்கானிஸ்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாகவே உத்வேகம் அளிக்கும் வகையிலேயே ஆடி வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் வெற்றிக்காகத் தீவிரமாகப் போராடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்திருக்கிறது. ஆனால், ஒரு பெரிய வெற்றி அவர்களுக்கு கிடைக்காமலே இருந்தது. “நாங்கள் 70-80% சதவிகிதம் எல்லாவற்றையும் சரியாக செய்கிறோம். ஆனால், எங்களின் செயல்பாடுகளுக்கு முழுமையான வடிவம் கொடுக்காமல் தடுமாறுகிறோம். 100% சிறப்பாகச் செயல்பட வேண்டும்” என்றார் ட்ராட். இங்கிலாந்துக்கு எதிராக ட்ராட் சொன்ன அந்த 100% பெர்ஃபார்மென்ஸைத்தான் இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் செய்திருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக சுமாராக பேட்டிங் ஆடி சொதப்பினர். இந்தியாவுக்கு எதிராக சுமாராகப் பந்துவீசி சொதப்பினர். ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங் – பௌலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு ஒரு அணியாக முழுமையாகச் செயல்பட்டிருந்தனர். இங்கிலாந்து பயங்கர வலுமிக்க அணி. ஆன் பேப்பரிலேயே மிரட்டலாக இருக்கும் அணி. நடப்பு சாம்பியன். டிஃபன்ஸ் என்கிற வார்த்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை எனும் அளவுக்கு அட்டாக்கிங் கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கும் அணி. அப்படிப்பட்ட அசுரத்தனமான அணியை ஆப்கானிஸ்தான் மாதிரியான வளர்ந்து வரும் அணி வீழ்த்த வேண்டுமெனில், அந்த அசுரனின் பலவீனம் என்னவென்பதை சரியாகக் கணித்து எந்தக் குறையும் இல்லாமல் அதன்மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் அதைத்தான் செய்திருந்தது.
இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரைக்கும் இங்கிலாந்து அணியின் பலவீனம் ஸ்பின்னர்களுக்கு எதிரான அவர்களின் ஆட்டமே. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த 9 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருந்தது. குறிப்பாக, இங்கிலாந்தின் டாப் 5 பேட்டர்களில் நான்கு பேர் ஸ்பின்னர்களுக்கு எதிராகவே வீழ்ந்திருந்தனர். அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை இங்கிலாந்து எதிர்கொண்டிருந்தது. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து இழந்த 9 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகவே இழந்திருந்தது. இந்த முறையும் டாப் 5 பேட்டர்களில் 3 பேர் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்திருந்தனர். ஆக,
கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி மொத்தமாக இழந்திருந்த 18 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகவே இழந்திருக்கின்றனர். இதைத்தான் ஆப்கானிஸ்தான் கையில் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் மூன்று ஸ்பின்னர்களுமே சுழல் ஜாலத்தால் அசத்தியிருந்தனர். பவர்ப்ளேயிலேயே முஜீப்பை வைத்து அட்டாக் செய்து காயை நகர்த்தியிருந்தார் ஆப்கன் கேப்டன் ஷாகிதி. முஜீப்பும் முதல் 10 ஓவர்களுக்குள் 5 ஓவர்களை வீசி 22 ரன்களை மட்டுமே கொடுத்து ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஃப் ஸ்பின்னரான நபி மலான் மற்றும் சாம் கரன் என இரண்டு இடதுகை பேட்டர்களின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ரஷீத் கான் பேட்டர்களுக்கு இடமே கொடுக்காமல் டைட்டாக வீசி கடைசியில் அடில் ரஷீத், மார்க் வுட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இடையில் நவீன் உல் ஹக் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு இன்ஸ்விங் டெலிவரியை வீசி கேப்டன் ஜாஸ் பட்லரை வெளியேற்றினார்.
இங்கிலாந்து தன் பலமாகக் கருதும் அட்டாக்கிங் கிரிக்கெட் எனும் பாணியையே ஆப்கானிஸ்தான் மறக்கச் செய்தது. இங்கிலாந்தின் டாப் 8 பேட்டர்களில் 7 பேரின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ்தான் இருந்தது. ஹாரி ப்ரூக்கின் ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே 100க்கு மேல் இருந்தது. அவர் மட்டும்தான் அரைசதமும் அடித்திருந்தார். மார்க் வுட்டும் அடில் ரஷீத்தும் மட்டும்தான் கடைசியில் ஆறுதலுக்காகக் கொஞ்சம் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடிவிட்டு சென்றனர்.

ஆப்கன் பௌலர்கள் நம்பிக்கையோடு வீசி வெல்வதற்குக் காரணமாக இருந்தது குர்பாஸின் பேட்டிங்தான். ஆப்கானிஸ்தானுக்காக ஓப்பனிங் இறங்கி அதிரடியாக ஆடியிருந்தார். கொஞ்சம் யோசித்தால், இங்கிலாந்தின் ‘பஸ் பால்’ யுக்தியை அவர்களுக்கு எதிராகவே நிகழ்த்திக் காட்டினார் எனலாம்.
முதல் விக்கெட்டுக்கு இப்ராஹிம் ஷத்ரானுடன் இணைந்து 114 ரன்களை 16.4 ஓவர்களிலேயே எடுக்க வைத்திருந்தார். 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்களை எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி சென்றார்.

பின்னர் வந்த இக்ரம் அலிகிலும் அரைசதம் அடித்து மிரட்டியிருந்தார். இவர்களின் ஆட்டத்தால்தான் ஆப்கன் அணி 284 ரன்களை எடுக்க முடிந்தது.
“இந்த வெற்றியின் மூலம் ஊக்கம் பெற்று ஆப்கனில் எதோ சிறுவனோ சிறுமியோ பேட்டைக் கையிலெடுத்து மைதானத்தில் கால்பதித்தால் அதுதான் எங்களின் சாதனை” என ஜொனதன் ட்ராட் பேசியிருந்தார். நிச்சயமாகவே பல இன்னல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் ஆப்கன் மக்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவே இருக்கும்.

“இது எங்களின் முதல் வெற்றி. ஆனால், இது கடைசியாக இருக்கப்போவதில்லை. இன்னும் வெல்வோம்!” என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி. அவரின் நம்பிக்கை நிஜமாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.