ஏ.ஆர்.ரஹ்மானால் பட வாய்ப்புகளை இழந்தேன் : நடிகர் ரஹ்மான் பேட்டி

நடிகர் ரஹ்மான் தற்போது தனது இரண்டாவது ரவுண்டில் பிசியாகி விட்டார். விரைவில் வெளிவர இருக்கும் ஹிந்தி படமான 'கண்பத்'தில் அவர் அமிதாப் பச்சனின் மகனாக நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழில் வெளியான 'சமரா' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஹ்மான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

1983ல் பள்ளி தேர்வை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த நேரம் என்னை அழைத்துச் செல்ல வந்த பெற்றோருடன் கூடவே மலையாள இயக்குனர் ஒருவரும் வந்தார். “சினிமாவில் நடிக்கிறாயா?” என கேட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், நான் சினிமாவில் நடிப்பது போல ஒரு கனவு கண்டிருந்தேன். அந்த கனவு நனவான தருணம் போல 'கூடெவிடே' படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக படம் இயக்கும் எண்ணம் எழுந்தது. எப்போதும் எனக்கு கே.பாலச்சந்தர், பாரதிராஜா பாணியில் தான் எண்ணங்கள் தோன்றும் என்பதால் அதேபோல உணர்வு பூர்வமான ஒரு கதையை உருவாக்கினேன். படத்திற்கு 'ஈடன் கார்டன்' என டைட்டில் வைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. என்னுடைய மனைவியும் கூட, லட்சுமி வீடு தேடி வரும்போது அதை வேண்டாம் என சொல்லிவிட்டு எதற்காக படம் இயக்குகிறீர்கள் என கூறி என் முடிவை மாற்றிவிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட எனது சகோதரர் என்பதால் பல படங்களில் என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் இசையமைப்பாளராக அவரையும் ஒப்பந்தம் செய்து தரும்படி வற்புறுத்தினார்கள். இதனாலேயே பல படங்களை நான் தவிர்க்க வேண்டியதாக ஆகிவிட்டது. அதேசமயம் 'சங்கமம்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருந்தேன். அந்த படத்திலும் நாட்டுப்புற நடன காட்சி இருந்தது. அது மட்டுமல்ல இரண்டு ரஹ்மான்களின் கூட்டணியில் இந்த படம் உருவானதால் ஒரு எதிர்பார்ப்பும் அந்த படத்திற்கு இருந்தது. கிளைமாக்ஸில் ஆடும் நடனத்திற்காக இங்கே சென்னை விஜிபியில் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அந்த காட்சியில் பல பேர் முன்னிலையில் நடனமாடி பாராட்டுக்களை பெற்றேன். (ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, நடிகர் ரஹ்மானின் சகோதரி)

90களின் துவக்கத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அந்த சமயத்தில் இங்கே தமிழ், மலையாளத்தில் பிசியாக நடித்து வந்தேன் இப்போது மீண்டும் அதற்கான நேரம் வந்திருக்கிறது. 'கண்பத்' என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளேன். இந்த படத்தின் இயக்குநர் விகாஸ் பால் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பவர் என பெயர் பெற்றவர். என்னிடம் இந்த படத்தின் கதையை சொன்னபோது இதில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்றும் அவரது மகனாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னதும் மறு யோசனை இன்றி உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டேன்.

எனக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கனவே அமைந்தது, அந்த வரிசையில் இப்போது அமிதாப் பச்சனுடனும் நடித்து விட்டேன். பாலிவுட்டை பொருத்தவரை தென்னிந்திய கலைஞர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது, என்ன படம் வெளியாகிறது என்பது முதற்கொண்டு உடனடியாக அங்கே தெரிந்து விடுகிறது. கண்பத் படப்பிடிப்பின்போது என்னிடம் வந்து சிலர் சிங்கம் 2, துருவங்கள் பதினாறு படங்களில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது என பாராட்டினார்கள். அப்போதுதான் டப்பிங் படங்களின் வீச்சு பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த படத்தில் கதாநாயகன் டைகர் ஷெராப்புக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொடுக்கும் கோச்சாக நடித்துள்ளேன். பாலிவுட் படம் என்றதுமே கலர் கலராக உடைகள் கொடுப்பார்கள் என நினைத்தால் கிட்டத்தட்ட பிச்சைக்காரன் போன்ற ஒரு தோற்றத்தில் என்னை அப்படியே மாற்றி விட்டார்கள். இந்த படத்தின் கதை 2075ல் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. 2075ல் ஒரு புது உலகம் எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் காட்டி உள்ளார்கள். எனது மூத்த மகள் நடிக்க விரும்பினார். படிப்பை முடித்துவிட்டு அதன்பின் நடிப்பது பற்றி பார்க்கலாம் என கூறினேன். பின்னர் படிப்பை முடித்தவர் அப்படியே திருமண வாழ்க்கையில் இணைந்து செட்டில் ஆகிவிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் எந்த படம் எடுத்தாலும் அதை இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசும் பழக்கமும் எல்லா படங்களிலும் குறை கண்டுபிடிக்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. 90களின் காலகட்டத்தில் படப்பிடிப்பில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பல கதைகளை பேசிக்கொண்டு படம் பற்றி விவாதிப்போம். அப்போது ஒரு பாசம் அனைவரிடமும் இருந்தது. இப்போது அது இல்லை. எல்லாருமே கமர்ஷியலாக இருக்கிறார்கள். காலம் மாறி வருவதால் அவர்களையும் குறைசொல்ல முடியாது.

இப்போது தமிழில்தான் அதிகம் நடிக்கிறேன். இங்கே எத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கையைத்தான் பார்க்கிறார்கள் அதைப்பொருத்துதான் வாய்ப்பு வருகிறது. அதனால் தான் குறைவான படங்களில் நான் நடிப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு நடிகருக்கு அவர் நடித்த படம் எத்தனை நாள் ஓடியது என்பதுதான் பெருமையைத் தரும்.

தமிழில் தற்போது நிறங்கள் மூன்று என்கிற படத்தில் நடித்துள்ளேன். இதை அடுத்து துப்பறிவாளன் 2, ஜனகனமன ஆகிய படங்களும் தயாராகின்றன. நீட் தேர்வை எதிர்த்து உருவாகியுள்ள அஞ்சாமை என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் நடித்துள்ளேன். மலையாளத்தில் நான் நடித்துள்ள எதிரே என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தவிர '1000 பிளஸ் பேபீஸ்க்' என்கிற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.