ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் உருவாகி கடந்த 10 ஆண்டுகளில் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) குடும்பம் மட்டுமேபயன் அடைந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, நேற்றிரவு தெலங்கானா மாநிலம், கொல்லாபூரில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
தெலங்கானா காலேஸ்வரம் அணைக்கட்டு திட்டத்தில் சந்திர சேகர ராவ் அரசு, லட்சம் கோடியில் முறைகேடு செய்துள்ளது. பிஆர்ஸ்-பாஜக இரு கட்சிகளும் இணைந்து தெலங்கானா மாநில மக்கள் பணம்ரூ.1 லட்சம் கோடி வரை மோசடிசெய்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தையும் இவர்கள் ஏமாற்றி உள்ளனர். 2040 வரை தெலங்கானாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா ரூ.31,000 வரை ஒவ்வொரு ஆண்டும்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாகார்ஜுனா சாகர், ஸ்ரீராம் சாகர், சிங்கூர், பிரியதர்ஷினி அணைகள் காங்கிரஸ் கட்டியது தான். தலித், கிரிஜன பிரிவினருக்கு நிலம் வழங்கியது காங்கிரஸ் கட்சி.அன்று இந்திரா காந்தி வழங்கிய நிலங்களை கேசிஆர் எடுத்து கொள்ள முயற்சி செய்கிறார். தெலங்கானா மாநிலம் உருவானதால் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே பயன் அடைந்ததுள்ளது. வருவாய் துறையில் முறைகேடு, மதுபான ஊழல், மணல் கொள்ளை போன்றவை தெலங்கானாவில் அதிகரித்து உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். தெலங்கானாவில் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். ஒரு ரூபாய் கூட பெண்கள் பஸ் டிக்கெட்டுக்காக செலவு செய்ய வேண்டியதில்லை. பெண்களே இம்மாநிலத்தின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் ஆண்டுக்கு ரூ.7,500, விவசாய கூலி ஆட்களுக்குஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு இந்திரா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும். 200 யூனிட் வரை ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். வித்யா பரோசா பெயரில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவு செய்யப்படும்.
பள்ளி, கல்லூரி கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். முதியோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், ராஜீவ் ஆரோக்கிய திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ. 10 லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவை அமல் படுத்தப்படும்.
தெலங்கானாவில் காங்கிரஸ்- பிஆர்எஸ் கட்சிகள் இடையே தான் போட்டி. பாஜக-பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய 3 கட்சிகளும்மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. நாடாளுமன்றத்தில் சந்திரசேகர ராவ் பாஜகவுக்குஆதரவு அளிக்கிறார். ஜிஎஸ்டி உட்பட பல்வேறு மசோதாவிற்கு பிஆர்எஸ் ஆதரவு அளித்தது.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை சோதனைகளுக்கு பயந்து தான் தெலங்கானா முதல்வர் பாஜகவுக்கு ஆதரவுஅளித்து வருகிறார். இவர்களுக்குகாங்கிரஸ் தான் முதல் எதிரி. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏஐஎம்ஐஎம் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸுக்கு நஷ்டம். பாஜகவுக்கு லாபம். ஆதலால் ஏஐஎம்ஐஎம் கட்சியும் மறைமுகமாக பாஜகவுக்கு உதவி வருகிறது.
இவ்வாறு ராகுல் பேசினார்.