நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகார்; முக்கியக் குற்றவாளியைக் கைதுசெய்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூரில் தனக்குச் சொந்தமான சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு, தனக்கு வெறும் ரூ.4.1 கோடி கொடுத்து ஏமாற்றியதாக, நடிகை கௌதமி சிலர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவுசெய்து, தலைமறைவாக இருந்தவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பலராமன் என்பவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

நடிகை கௌதமி

இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “சென்னை, ஈ.சி.ஆர் ரோட்டில் வசித்துவரும் பிரபல நடிகை கௌதமி, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், `திருவள்ளுவர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்திலிருந்த எனக்குச் சொந்தமான சுமார் 8.3 ஏக்கர் நிலத்தை விற்றுத் தருவதாகக் கூறி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர், அந்த இடத்தையும் அதன் அருகிலுள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பையைச் சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்துக்கு 2015-ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டு, எனக்கு ரூ.4.1 கோடி மட்டும் விற்பனைத் தொகையாகக் கொடுத்தனர். அதன் பின்னர் 2021-ம் ஆண்டு வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் வந்த பிறகுதான், நான் ஏமாற்றப்பட்ட விவரம் எனக்குத் தெரியவந்தது.

பலராமன்

எனவே என்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் இதில் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்தப் புகாரின்பேரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவுசெய்து, புலன் விசாரணை மேற்கொண்டுவந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பலராமன் என்பவர் இன்று கைதுசெய்யப்பட்டு, நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.