பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பெண் ஊழியர் கே.எஸ்.பிரதிமா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிரண் என்ற அந்த நபர் கர்நாடக அரசின் வாகன ஓட்டுநராக ஒப்பந்தப் பணியில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கிரணை பிரதிமா பணி நீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதை அவர் ஒப்புக்கொண்டு போலீஸில் அவர் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
கொலைக்குப் பின்னர் கிரண் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து அவரைத் தேடிவந்த போலீஸார் அவரை சாம்நாஜநகரில் இருந்து கைது செய்துள்ளது.
நடந்தது என்ன? கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார் பிரதிமா(45). நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 8 மணிக்கு மேல் பிரதிமாவை அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவரது அழைப்புக்கு பதில் இல்லை.
இதையடுத்து அவர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது பிரதிமா கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் குற்றவாளி இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 48 மணி நேரத்துக்குள் போலீஸார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.