சர்ச்சை எதிரொலி : சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா

தமிழ் சினிமா உலகில் தியேட்டர்களுக்கென இரண்டு சங்கங்கள் உள்ளன. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என்ற ஒரு சங்கமும், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் என மற்றொரு சங்கமும் உள்ளன. இதில் இரண்டாவது சங்கத்திற்கு திருப்பூர் சுப்பிரமணியம் தலைவராக உள்ளார்.

அவர் திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார். திரையுலகம் சார்ந்த பல பிரச்சனைகளில் அவர் குரல் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் 'லியோ' படம் குறித்து அவர் பேசிய பல வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'டைகர் 3' ஹிந்திப் படத்தை அவரது தியேட்டரில் அரசு அனுமதி பெறாமல் காலை 7 மணிக்கும், இரவு 11 மணிக்கு மேலும் சிறப்புக் காட்சிகளைத் திரையிட்டார்.

அது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஒரு சங்கத்தின் தலைவரே இப்படி செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து சங்க செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இப்பவும் எனது சொந்த வேலை காரணமாக நமது சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுகாறும்(இதுவரை) ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.