பீரியட் காமெடித் திரைப்படமாக சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கிறது, `80s பில்டப்’.
பிரபு தேவாவின் ‘குலேபகாவலி’, ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார். இதில் சந்தானத்துடன், நடிகை ராதிகா ப்ரீத்தி, நடிகர்கள் சுவாமிநாதன், ஆனந்த் ராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று, சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. நடிகர், நடிகைகள் உட்படப் படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
இத்திரைப்படத்தின் இயக்குநர் படப்பிடிப்பு தளத்தில் மல்டி கேமரா செட் அப்களை வைத்து அதிவேகமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டார் என விழாவில் பங்கேற்ற அனைவரும் அவருக்குப் புகழாரம் சூட்டினர். இதனையடுத்து இத்திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் ஆனந்த் ராஜைப் பற்றிப் பலரும் பாராட்டிப் பேசினர்.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், “ரொம்ப நாள்களாக கல்யாண் கூட படம் பண்றது தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. இன்னைக்கு அது நடந்துருச்சு. காமெடி படங்களுக்கு வந்து என்கிட்ட கேட்டாலே, ‘இல்ல அப்புறம் பண்ணலாம்’ன்னு சொல்லிட்டே இருந்தேன். இந்தப் படத்துக்கு கல்யாண் வந்து கேட்டார். அதுக்கு பிறகு இந்தப் படம் நடந்துச்சு. இந்தப் படத்தோட கதைக்களத்திற்கேற்ப 80ஸ் வடிவிலான இசை வேலைகள் பண்ணியிருக்கோம். இயக்குநர் கல்யாண்கிட்ட இருந்து பல விஷயங்கள் நான் இந்தப் படத்தின் மூலமாகக் கத்துக்கிட்டேன். அந்த விஷயங்களெல்லாம் இனி வர்ற படங்களுக்கு எனக்குப் பயன்படும்” எனப் பேசினார்.
இதனையடுத்து வந்து பேசிய நடிகர் சந்தானம், “எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நம்ம என்ன பண்றோம், நமக்குப் பின்னாடி யார் வர்றாங்கன்னு சிந்தனை இருக்கும். அந்த மாதிரியான சமயத்துல ரசிகர்கள்தான் உடன் இருந்தாங்க. இந்தப் படத்தோட டைட்டில் ’80s பில்டப்’. எங்க தயாரிப்பாளர், ‘இப்போ வர்ற நிறையா படங்கள்ல 80ஸ் பாடல் போட்டு ஹீரோக்கு பில்டப் கொடுக்குறாங்க, நம்ம 80ஸ் படம் எடுத்து பில்டப் கொடுப்போம்’ன்னு நினைச்சிருக்கார் போல” எனச் சிரித்துக் கொண்டே தொடர்ந்தவர்,
“இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மூலமாகதான் நான் முதன்முதல்ல இடம் வாங்குனேன். முன்னாடிலாம் நாள் கணக்குல சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு நாள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்கிட்ட ‘இடம் வாங்கி வச்சிருக்கீங்களா’ன்னு கேட்டாரு. நான் இல்லன்னு சொன்னதும், ‘நாள் கணக்குல சம்பளம் இல்லாம, மூணு படத்துக்கு சேர்த்து நான் சம்பளம் தர்றேன். போய் ஒரு இடம் வாங்குக’ன்னு என்கிட்ட சொன்னார்.
எங்க படத்தோட இயக்குநர் ரொம்பவே வேகமாகப் படப்பிடிப்பை முடிச்சிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல இது ஷூட்டிங் வீடா, இல்ல பிக் பாஸ் வீடான்னு எங்களுக்குச் சந்தேகமாக இருக்கும். அந்த அளவுக்குப் பல கேமராக்களை செட் பண்ணி வச்சிருப்பார். அனகோண்டா முட்டைல கூட ஆம்லேட் போடலாம், ஆனா இவர் அவிச்ச முட்டைல ஆம்லேட் போட நினைப்பாரு. எல்லோரும் படப்பிடிப்புல கிம்பல் வச்சு ஷூட் பண்ணுவாங்க. ஆனா, இயக்குநர் கல்யாண் பல நகைச்சுவை நடிகர்களை வச்சு கும்பலாக ஷூட் பண்ணியிருக்கார். இவ்ளோ வேகமாகப் படப்பிடிப்பை நடத்தினாலும் படத்தோட அவுட்புட் நல்ல தரத்துல வந்துருக்கு” என வழக்கம் போலத் தனது நகைச்சுவை டெம்ப்ளேட்டில் பேசி விடைபெற்றார்.