தஞ்சாவூர் அருகே திருமணமான இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டு, இளம்பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக நாடகமாடியிருக்கிறார். அவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர், இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (33). இவரின் அக்கா மகள் உமா (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தஞ்சை மாவட்டம், கொசுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். உமாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் மாமன் பராமரிப்பிலிருந்த உமா, சென்னையிலுள்ள தனியார் கார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
தீபாவளி கொண்டாடுவதற்காக தன் ஊருக்குச் சென்றுவிட்டு, தாய்மாமன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தஞ்சாவூர் அருகேயுள்ள நாட்டாணியில் நேற்று பிரபுவின் உறவினருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்கு பிரபு குடும்பத்துடன் சென்றுவிட்டார். வீட்டிலிருந்த உமா, பிரபுவுக்கு போன் செய்து, தன்னையும் அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற பிரபு, தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி (30), தீனா (33) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.

இதையடுத்து உமாவை நாட்டாணிக்கு அழைத்து வருவதற்கு கருப்பசாமியை அனுப்பியுள்ளார். தச்சன்குறிச்சிக்குச் சென்று உமாவை அழைத்து வந்த கருப்பசாமி, நல்ல மது போதையில் இருந்திருக்கிறார். உமாவை நேராக நாட்டாணிக்கு அழைத்துச் செல்லாமல், சென்னம்பட்டி முதலைமுத்துவாரி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சந்தேகமடைந்த உமா, `காட்டுப்பகுயில் ஏன் செல்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, குறுக்கு வழியில் செல்வதாகக் கூறியிருக்கிறார். முதலைமுத்துவாரி அருகே சென்ற பிறகு, வலுக்கட்டாயமாக உமாவைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். `என்னை விட்டுவிடு…’ எனக் கதறியவரின் குறல், மது போதையில் இருந்த கருப்பசாமிக்குக் கேட்கவில்லை. தொடர்ந்து நான்கு முறை பாலியல் கொடுமைசெய்து, உமாவை சீரழித்திருக்கிறார்.

இதற்கிடையில் உமாவை அழைத்துக் கொண்டு கருப்பசாமி வராததால், பிரபு இருவருக்கும் போன் செய்து பார்க்க, இருவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. உடனே தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு தேடிச் சென்றிருக்கிறார். வழியில் கருப்பசாமி மட்டும் நின்று கொண்டிருந்திருக்கிறார். `உமா எங்கே?’ என கேட்க, `இரண்டு பேர் என்னை அடித்துப் போட்டுவிட்டு, உமாவைக் கடத்திச் சென்றுவிட்டனர்!’ எனச் சொல்லி கதறி அழுதிருக்கிறார்.
பதற்றமடைந்த தாய்மாமன் பிரபு, உடனே இது தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை முதலைமுத்துவாரியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் சென்றிருக்கிறது. பிரபு உள்ளிட்டோரும், அந்த இடத்துக்குச் செல்ல, இறந்துகிடப்பது உமா என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கருப்பசாமி மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் விசாரிக்க, இரண்டு பேர் கடத்திச் சென்றதாகத் திரும்ப சொன்னதையே சொல்லியிருக்கிறார். பின்னர் போலீஸார் தங்கள் பாணியில் கவனிக்க, உமாவைப் பாலியல் கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தஞ்சாவூர்ப் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில், “மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கருப்பசாமி, உமாவைப் பாலியல் கொடுமை செய்துள்ளார். இதை உமா வெளியே சொன்னால் தனக்குப் பிரச்னையாகிவிடும் என்ற பயத்தில், உமா அணிந்திருந்த துப்பட்டாவிலேயே அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” என்றனர்.