அஹமதாபாத்தில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றனர்.
இந்த இறுதிப்போட்டிக்குத் தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி முதன்முதலாக 1983 இல்தான் உலகக்கோப்பையை வென்றிருந்தது. அந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் பரவலாகப் பிரபலமடைந்தது. அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் கபில்தேவ். அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஹீரோ. இந்தியாவில் நடைபெறும் நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை உலகக்கோப்பையை வென்ற அத்தனை கேப்டன்களையும் அணிவகுக்க செய்ய வேண்டும் என ஐ.சி.சி திட்டமிருந்தது. இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தனர். உலகக்கோப்பையை வென்ற அத்தனை கேப்டன்களுக்கும் பிரத்யேக கோட் ஒன்றை நினைவாக வழங்கவிருப்பதாகவும் ஐ.சி.சி அறிவித்திருந்தது. இதன்படி, அத்தனை முன்னாள் கேப்டன்களுமே அஹமதாபாத்திற்கு வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் கபில்தேவ் இந்த உலகக்கோப்பைக்கு தனக்கு அழைப்பே வரவில்லை என கூறி வருத்தப்பட்டிருக்கிறார். இதுபற்றி தனியார் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசியிருக்கும் கபில்தேவ், “நீங்கள் என்னை அழைத்தீர்கள். நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் அங்கு செல்லவில்லை. எளிமையான விஷயம்.

என்னுடைய 83 அணியினர் அத்தனை பேருடனும் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், பிசிசிஐ எங்களை அழைக்கவில்லை. நிறைய பொறுப்புகளும் நிறைய வேலைகளும் இருக்கும் போது நம்மை சில நேரங்களில் மறந்துவிடுவார்கள்.” என மனம் வருந்திப் பேசியிருக்கிறார்.

இந்திய அணி இன்று செய்யும் சாதனைகள் அத்தனைக்கும் தொடக்கப்புள்ளி கபில்தேவ்தான். இந்திய கிரிக்கெட்டின் நாயகன் அவர். அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
கபில் தேவ் அழைக்கப்படாதது குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!