புத்தளப்பட்டு : ஆந்திராவில், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன், கிராம மக்கள் முன்னிலையில் மனைவியின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் வைத்து நடத்தையை நிரூபிக்க ஏற்பாடுகள் செய்த நிலையில், அரசு அதிகாரிகள் தலையிட்டு, அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திராவின் சித்துார் மாவட்டம், புத்தளப்பட்டு அருகே, தத்தித்தோப்பு என்ற கிராமம் உள்ளது. இங்கு எருகுல பிரிவை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.
இங்கு வசிக்கும், 57 வயதான நபருக்கு, தன் 50 வயதான மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. நான்கு பிள்ளைகளுக்கு தாயான தன் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
பல ஆண்டுகளாக இவர்கள் இடையே சண்டை தொடர்ந்து வருகிறது. இது போன்ற நேரங்களில், கொதிக்கும் எண்ணெயில் சந்தேகத்துக்குரிய பெண்ணின் கைகளை விட செய்து, அவரது நடத்தையை பரிசோதிப்பது அந்த பழங்டியினர் மத்தியில் நீண்ட நாள் பழக்கமாக உள்ளது.
எண்ணெயில் கைகளை விடும்போது அந்த பெண்ணின் கைகள் வெந்தால், அந்த பெண், தன் கணவருக்கு துரோகம் இழைத்தவராக கருதப்படுவார்.
கைகளில் காயம் ஏற்படாவிட்டால், அந்த பெண் கணவருக்கு விசுவாசமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், பழங்குடியின வழக்கப்படி, கொதிக்கும் எண்ணெய்க்குள் தன் மனைவியின் கைகளை விட செய்து, பரிசோதிக்க அவரது கணவர் முடிவு செய்தார்.
இதற்காக, கிராம மக்கள் முன்னிலையில், 5 லிட்டர் எண்ணெயை, அலங்கரிக்கப்பட்ட மண் பானையில் விட்டு, கிராம மக்கள் கொதிக்க வைத்தனர்.
அந்த பெண் எண்ணெய் பானைக்குள் கைகளை விடுவதற்கு சில நிமிடங்கள் முன் இது குறித்து அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு நடக்க இருந்த பரிசோதனையை தடுத்து நிறுத்தி, அந்த பெண்ணை காப்பாற்றினர்.
இது தொடர்பாக, கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும் இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளை வழங்கவும், கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்