இந்தியாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல்; கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். காசாவுக்கு எதிரான இந்த போரை முன்னிட்டு ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது, இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களுடைய கொடி பறக்க கூடிய கப்பல் செங்கடலில் சென்றால், அவை எல்லாவற்றையும் நாங்கள் இலக்காக கொள்வோம் என சபதமெடுத்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்குரிய கேலக்சி லீடர் என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்றை, ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர். கப்பலில் 22 சிப்பந்திகளுடன் மொத்தம் 52 பேர் பயணித்துள்ளனர்.

அந்த கப்பல் துருக்கியில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அதில், சர்வதேச சிப்பந்திகள் இருந்தனர். எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், அது இஸ்ரேல் கப்பல் அல்ல. கப்பலில் இஸ்ரேல் மக்கள் யாரும் இல்லை என தெரிவித்தது.

அந்த கப்பலுக்கு வெவ்வேறு நிறுவனங்கள் பங்குகளை கொண்டுள்ளதுடன், சில நிறுவனங்கள் குத்தகைக்கும் எடுத்துள்ளன. அவற்றில் இஸ்ரேல் நிறுவனமும் ஒன்று என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஹகாரி கூறும்போது, செங்கடலில் சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியது சர்வதேச அளவில் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என கூறியுள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு உள்ளது என கூறப்படுகிறது. ஆயுதங்களையும் வழங்குகிறது என்று கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.