குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium Enterprises)
வேலூர் மாவட்டத்தில் பாட்பூரி எனும் புராடக்டைத் தயாரிக்கலாம். பாட்பூரி என்பது உலர்ந்த பூக்கள், நறுமணப் பொருள்கள், சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழங்களின் தோல் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஓர் அலங்கார நறுமணப் பொருள். வீடு, அலுவலகம், பெரு நிறுவனங்களின் வரவேற்பு அறைகள் போன்றவற்றில் பாட்பூரியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அறையை நறுமணத்தோடு வைத்துக்கொள்ள இந்த பாட்பூரி உதவுவதால், பெரும்பாலானோர் இதை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். இதை அழகான வடிவமைப்புகொண்ட உலோக, மண் பாத்திரங்களில், அலங்கார ஜாடிகளில் நிரப்பிப் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கான தொழிற்சாலையை வேலூர் மாவட்டத்தில் அமைக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா, 250 ஏக்கரில் சாமந்தி, 150 ஏக்கரில் சம்பங்கி, 50 ஏக்கரில் லாவண்டர் விளைச்சலாகிறது. இந்தப் பூக்கள் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்குச் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், பல நேரங்களில் உரிய விலை கிடைக்காததாலும் அதிகப்படியான விளைச்சலாலும் குப்பையில் வீசியெறிய வேண்டிய அவலமும் நடக்கின்றது.

இதனைத் தடுக்கும் வகையில் அந்தப் பூக்களில் ஒரு குறிப்பிட்டப் பகுதியை கைப்பற்றி உலர வைத்து, அதனுடன் நறுமண பொருள்கள், சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழங்களின் தோல் (சுமார் 150 கிராம்) போன்றவற்றுடன் நறுமண எண்ணெய் (தோராயமாக 20 மில்லி லிட்டர்) கலந்து, அழகிய வடிவமைப்பு கொண்ட பாட்டில், பாக்ஸ், பை ஏதேனும் ஒன்றில் அடைத்து, அதன் விலையை 120 ரூபாய் என நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
வேலூர் மாவட்டத்தில் வளங்களின் ஒன்றான வாழையிலிருந்து பெறப்படும் நாரைப் பயன்படுத்தி விக் (Wig) மற்றும் முடி உதிர்வு பிரச்சனை உள்ளோருக்கு தேவையான இடங்களில் முடியை பொருத்தும் விதமாக (Hair Extension) செயற்கை முடியைத் தயாரிக்கலாம். சந்தையில் பெரும்பாலும் செயற்கை இழைகளைப் பயன்படுத்தியே விக் தயாரிக்கப்படுகிறது. இவை சுமார் 7,500 ரூபாய் தொடங்கி 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்பதால் பலராலும் அதைப் பயன்படுத்த முடிவதில்லை.

அதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வாழை நாரிலிருந்து ‘விக்’ தயாரிப்பதோடு, அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வகையில் விலை மலிவாகவும் தரலாம். இது பக்கவிளைவுகளையோ தோல் சார்ந்த பிரச்னைகளையோ ஏற்படுத்தாது. பொதுவாக, செயற்கை கேசம் திருமணத்துக்கு தயாராகும் மணமகன், மணமகள் போன்றோருக்கும் புற்றுநோய் சிகிச்சை பெற்றுக் கொண்டோருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இவர்களோடு முடி உதிர்வு பிரச்னைக்கு ஆளானோருக்கும் இது பயனளிக்கும் என்பதால் இதற்கான தொழிற்சாலையை வேலூர் மாவட்டத்தில் நிறுவலாம்.

பெண்களுக்கு சுமார் 18 அங்குலம் முதல் 34 அங்குலம் வரையிலான வெவ்வேறு அளவுகளிலும், ஆண்களுக்கு 4 அங்குலம் வரையிலும் செயற்கை கேசத்தைத் தயாரித்து வழங்கலாம். சந்தையில் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து, விற்றால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம்.
வேலூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான கரும்பின் சக்கையிலிருந்து ட்ரீம் பேப்பர் (Dream Paper) எனும் புராடக்டைத் தயாரிக்கலாம்.
பெரும்பாலும் கரும்பிலிருந்து சர்க்கரை, எத்தனால் தயாரிக்கலாம். அதன் சக்கையைப் பயன்படுத்தி பேப்பர், மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செய்யலாம். ஆனால், சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்வதிலே அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு சில ஆலைகள் கரும்பு சக்கையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்பு சக்கைகள் பேப்பர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை.

மாறாக, அந்தச் சக்கையை மீண்டும் உரமாக, நிலத்திலேயே கொட்டுகின்றனர். இந்தக் கரும்புச் சக்கையைத் தேவையான அளவுக்குக் கொள்முதல் செய்து ட்ரீம் பேப்பர் தயாரிக்கலாம். இந்தப் பேப்பரை அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் அலங்கார வால்பேப்பர்களாக (Wallpaper) பயன்படுத்தலாம்.

இந்த வகை வால்பேப்பர்கள் பொதுவாக மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பேப்பர், நெகிழி ஆகியவற்றை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. மரக்கூழிலிருந்து பேப்பர் தயாரிக்க உதவுவது செல்லுலோஸ். இந்த செல்லுலோஸ் கரும்புச் சக்கையிலும் நிறைந்திருப்பதால் அதன்மூலம் ட்ரீம் பேப்பரை உருவாக்கலாம். இது நச்சுத்தன்மையற்றது, எளிதில் மக்கும் தன்மையற்றது, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. மேலும், நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் ட்ரீம் பேப்பரை பலவிதமான வண்ணங்களில் தயாரிக்கவும் செய்யலாம் என்பதால், வேலூர் மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலையை அமைக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், வாலாஜாபேட்டை, கே.வி.குப்பம், போளூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 80 டன் வீதம் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 80 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இங்கே உற்பத்தியாகும் கரும்புகள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை ஆலைகளுக்குச் சர்க்கரை தயாரிப்புக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. இந்தச் சர்க்கரை ஆலைகளிலிருந்து போதுமான அளவுக்குக் கரும்புச் சக்கையைக் கொள்முதல் செய்து ட்ரீம் பேப்பர் தயாரித்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
(இன்னும் காண்போம்…)