Electric wires that cross pedestrians | பாதசாரிகளுக்கு எமனாகும் மின்சார ஒயர்கள்

மின்சாரம் பாய்ந்து தாய், மகள் இறந்த சம்பவம், பெங்களூரு நகர மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் நகரின் பல இடங்களில் மின்சார ஒயர்கள் ஆங்காங்கே தொங்கி கொண்டுள்ளன. நடைபாதையில் நடந்து செல்லவே பலரும் அச்சப்படுகின்றனர்.

பெங்களூரு ஒயிட்பீல்டு ஹோப் பார்ம் அருகில் நடைபாதையில், கடந்த 19ம் தேதி அதிகாலை கை குழந்தையுடன் நடந்து சென்ற சவுந்தர்யா, 23 என்ற இளம்பெண் அறுந்து கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் மிதித்தார். இதில், அவரும், அவரது ஒன்பது மாத பெண் குழந்தை லீலாவும் தீயில் கருகி பலியாகினர். உடன் வந்த கணவர் சந்தோஷ் லேசான காயத்துடன் தப்பினார்.

இச்சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பெஸ்காம்’ அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்தது அம்பலமானது.

ஆனால், இச்சம்பவம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில், நகரின் பல பகுதிகளில் நடைபாதையில் உள்ள மின்சார கம்பங்களில் இருந்து ஆபத்தான நிலையில் மின் ஒயர்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெற பெங்களூரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு நோயாளிகள், உறவினர்கள் வருகின்றனர். எப்போதும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ளது. நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள மின்சார பாக்ஸ்களில் ஒயர்கள் வெளியே தெரிந்தபடியும், சில பாக்ஸ்களில் ஒரு கதவு காணாமல் போய், பாதசாரிகளுக்கு, ‘எமனாக’ உள்ளது. இதுபோன்ற நிலை நகரின் பல இடங்களில் காணப்படுகிறது.

* மின் துறை அமைச்சர்

சர்வக்ஞர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், மின் துறை அமைச்சருமான ஜார்ஜ் தொகுதியில், நிலைமை மோசமாக உள்ளது. அதுவும், பானஸ்வாடி பிரதான சாலையில் அவரது கட்சி அலுவலகம் முன் உள்ள மின் கம்பத்தில் விளக்கு எரியவில்லை. அங்கு மட்டுமல்ல, பெஸ்காம் கிழக்கு மண்டல அலுவலகம் அருகிலும் மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை.

சுப்பண்ணபாளையாவில் நடைபாதையில் உள்ள மின்மாற்றியில், பெரிய பெரிய ஒயர்கள் வெளியே தென்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.