”அசோக் கெலாட் அரசு 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை சீரழித்துவிட்டது” – ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

ஜெய்ப்பூர்: கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை அசோக் கெலாட் அரசு சீரழித்துவிட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.

ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனால் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சியைக் கொண்டுவர மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏனென்றால் கடந்த ஐந்தாண்டுகளில், அசோக் கெலாட் அரசு ராஜஸ்தானை சீரழித்துவிட்டது. இந்த மாநிலம் ஊழல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சைபர் கிரைம் மற்றும் பயங்கரவாத வழக்குகள் ஆகியவற்றில் முதலிடத்தில் உள்ளது. இது மோசமான நிர்வாகமாக மாறியுள்ளது. எனவே மக்கள் அவற்றை அகற்றி பாஜக அரசை கொண்டு வருவார்கள். அசோக் கெலாட் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, வேலையற்றோருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. ஒருவரை ஒரு முறை மட்டுமே ஏமாற்ற முடியும், மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது” என்றார்.

முன்னதாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் கட்சியை பழிப்பதைத் தவிர வேறு எந்த வேலையையும் பிரதமர் மோடி செய்வதில்லை. என்னை, ராகுல் காந்தியை, சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து பழிக்கிறார். நான் அவரது தந்தையை மரியாதைக்குறைவாகப் பேசிவிட்டதாக மோடி கூறுகிறார். நான் ஏன் அவரை மரியாதைக் குறைவாகப் பேசப் போகிறேன். அவர் எப்போதே இறந்துவிட்டவர். இறந்தவர்களை அவமதிக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால், அந்த பழக்கம் மோடிக்கு இருக்கிறது” என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சிவராஜ் சிங் சவுகான், “கார்கேவுக்கு அறிவு மழுங்கிவிட்டதாக (damaged) தெரிகிறது. ஊழல், மோசடி செய்பவர்களை பிரதமர் மோடி விட்டுவைக்க மாட்டார். இந்த பயத்தின் காரணமாகவே இதுபோன்ற வினோதமான கருத்துக்களை கூறுகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.