சென்னை: நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளில் நோயின் தலைமையிடமாக இந்தியா விளங்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் “உலகளவில் மனித நலனைப் பேணுகின்ற வகையில், நீரிழிவு நோயை தடுப்பதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமையில் நடந்த கருத்தரங்கில் டாக்டர் அம்பேத்கர் நீரிழிவு நோய் நிறுவனத்தின் துறைத் தலைவர் மருத்துவர் ஏ.சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மருத்துவர் ம.பா.அஸ்வத் நாராயணன், சித்த மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீரிழிவு கல்வியின் முக்கியத்துவம், இன்சுலின் ஊசி முறையில் புதிய தொழில்நுட்பம், நீரிழிவினால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் கால்கள் பராமரிப்பு மற்றும் சிறுதானிய உணவுகள் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நீரிழிவு சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் உரையாற்றினர்.
துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி பேசியதாவது: நீரிழிவு நோயானது உலகளவிலும் குறிப்பாக இந்தியாவிலும் அதிக அளவில் வேகமாகப் பரவி வருகிறது. அடுத்து வரும் சில ஆண்டுகளில் நீரிழிவு நோயின் தலைமையிடமாக இந்தியா விளங்கும் என அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது.
அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 சர்வதேச மாநாட்டிலும் நீரிழிவு நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் விரிவாக விவதிக்கப்பட்டு, வேகமாக பரவி வரும் நீரிழிவு நோயை தடுப்பதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கான காரணம்: கடந்த 50 ஆண்டுகளில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை மிகவும் தாமதமாக அறிந்து கொள்வதும், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை முறையாக பின்பற்றாததே பாதிப்புக்கு காரணமாகும்.
நீரிழிவு நோயைத் தடுப்பதிலும், இந்நோயினால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்தி பராமரிப்பதிலும் செவிலியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.