சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11-வது முறையாக டிச.4 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தற்போது அவர் ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி வாயிலாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11-வது முறையாக டிச.4 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே செந்தில் பாலாஜி கைதான போது அமலாக்கத் துறை எடுத்துச் சென்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த விசாரணையின்போது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையையும் டிச.4-க்கு நீதிபதி எஸ்.அல்லி தள்ளிவைத்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கணையத்தில் இருக்கும் கொழுப்பு கட்டி, மன அழுத்தம், கால் வலி போன்றவற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பதில் சிரமம், மார்பு வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், அவரை 24 மணி நேரமும் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து பகிரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தர தனியார் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அவரை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது.