
நான் எதற்கு தலைமறைவாக போகிறேன் – மன்சூர் அலிகான் கேள்வி
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு வேண்டுகோள் விடுத்தது.
'ஆன்லைன்' வாயிலாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார், மன்சூர் அலிகான் மீது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் உட்பட, இரு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை, 11:00 மணியளவில், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' வழங்கி உள்ளனர்.
ஆனால் மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை. ‛‛எனக்கு குரல்வளை பாதிப்பு ஏற்பட்டு, தொடர் இருமல் வருவதால், போலீஸ் விசாரணைக்கு இன்று செல்லவில்லை'' என தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான்.
இதற்கிடையே மன்சூர் அலிகான் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவ, அதை மறுத்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில், ‛‛தொண்டை வலி பிரச்னையால் நான் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. நாளை விசாரணைக்கு வருகிறேன் என கடிதம் வாயிலாக போலீஸிற்கு தெரிவித்துள்ளேன். சிலர் எனக்கு தொடர்ந்து போன் மேல் போன் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். சுவிட்ச் ஆப் பண்ணினால் தலைமறைவாகி விட்டேன் என்கிறார்கள். பூட்டிய என் அலுவலகத்தை போட்டோ எடுத்து நான் தலைமறைவாகிவிட்டதாக சந்தோஷமாக செய்தி பரப்புகிறார்கள். நான் எதற்கு தலைமறைவாக போகிறேன். நான் என்ன நிஜமாகவே யாரையும் கற்பழித்துவிட்டேனா… இல்ல கொலை பண்ணிவிட்டேனா… ஏம்பா இப்படி ஆனந்த புளங்காகிதம் அடைகிறீர்கள்.'' என தெரிவித்துள்ளார்.