புதுடில்லி, ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, நீதிமன்ற அறையில் விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் 21 வழக்குகள் தொடரப்பட்டன.
இவற்றை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன சட்ட அமர்வு விசாரித்தது.
கடந்த அக்., 17ல் அளித்த தீர்ப்பில், ஒரே பாலின திருமணத்துக்கு, சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகாரம் அளிக்க முடியாது என, ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இது குறித்து, பார்லிமென்டே முடிவு செய்ய முடியும் என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இது குறித்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நேற்று குறிப்பிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரே பாலின தம்பதியினருக்கு எதிராக பாகுபாடு உள்ளதாக, தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பாகுபாடு இருந்தால், அதற்கு நிவாரணமும் வழங்க வேண்டும். அந்த வகையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இந்த மனு, வரும் 28ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதை, நீதிமன்ற அறையில் வைத்து விசாரிக்க வேண்டும். அப்போது தான், மனுதாரர் தரப்பு வாதங்களை முன் வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளின் கருத்தைக் கேட்டு முடிவை தெரிவிப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
வழக்கமாக, சீராய்வு மனுக்கள் மீது, ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய அமர்வு, தங்களுடைய அறைகளில் வைத்து விசாரிப்பர்.
மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் எதுவும் முன்வைக்க முடியாது. நீதிமன்ற அறையில் வைத்து விசாரித்தால், மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்