திருவனந்தபுரம், கேரளாவில் கொட்டி வரும் கனமழை காரணமாக பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் கொட்டி வரும் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை மலைப் பகுதி களிலும் மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் மூணாறு – குமுளி சாலையில் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு, நாளை வரை மிக கனமழை பெய்யும் என்பதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பத்தினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளார்குட்டி, பாம்பலா அணைகள் நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பெரியாறு கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. “கனமழையை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன,” என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்