சமீப காலமாகவே கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு ட்ரெண்ட் ஆகி விட்டது. சினிமா பிரபலங்கள் பலர் கருங்காலி மாலைகளை அணிந்து வலம்வர, பலரும் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
கருங்காலி மாலைகள் அணிந்துகொண்டால் கண் திருஷ்டி ஏற்படாது, அதிர்ஷ்டம் கைகூடும், செல்வ வளம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று தற்போது செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கருங்காலி செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் ஒரே தன்மை உடையவைதான். ஆன்மிக அடிப்படையில் கருங்காலி மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்றால் செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்கிறார்கள். செங்காலி மாலைகளும் கருங்காலி மாலைகளுக்கு இணையான பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தற்போது செங்காலி மாலைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கருங்காலி மாலைகளைப் போல் செங்காலி மாலைகள் அணிந்துகொள்வதும் அதிர்ஷ்டம் தருமா… செங்காலி மாலைகளுக்கு ஆன்மிக முக்கியத்தும் உண்டா போன்ற பல கேள்விகள் ஆன்மிக அன்பர்களிடம் தற்போது எழுந்துள்ளன. இது குறித்து உலக சித்த கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு. அரியிடம் பேசினோம்.
“நம் ஆன்மிக மரபில் இயற்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இறைவழிபாட்டைப் போலவே இயற்கை வழிபாடும் முக்கியமானது என்று நம் முன்னோர்கள் கருதியதே அதற்குக் காரணம். அதனால்தான் ஆலயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தீர்த்தக் குளமும் ஒரு விருட்சமும் ஏற்படுத்தி அதை வழிபட்டு வந்தார்கள். பெரும்பாலும் தல விருட்சம் என்பது அந்தந்தப் பகுதியில் காணப்படும் பெரும்பான்மையான விருட்சங்களில் ஒன்றாக அமையும். மேலும் ஆதியில் மரங்களே இறைவன் உறையும் கோயில்களாக வழிபடப்பட்டும் வந்தன. அந்த அடிப்படையில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களை நம் முன்னோர் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கருங்காலி மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மரங்களாகக் கருதப்பட்டன. கருங்காலி என்று சொல்கிறபோதே அதில் செங்காலியும் அடக்கம். இரண்டுக்கும் சிறு வேறுபாடு உண்டு. கருங்காலி மரங்கள் மிகவும் உறுதியானவை. செங்காலி கருங்காலியை விடக் கொஞ்சம் உறுதித் தன்மை குறைந்ததுவே. அதனால்தான் ஆயுதங்கள் செய்யும்போது கருங்காலியை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெரும்பாலும் அந்தக் கால ஆயுதங்களான ஈட்டி, கோடாரி ஆகியவற்றின் பிடிகளைக் கருங்காலியிலேயே செய்தார்கள்.
கருங்காலி, செங்காலி ஆகிய இரு மரங்களும் வசியத் தன்மை கொண்டவை என்று நம்பப்படுகின்றன. அந்தக் காலத்தில் குறிசொல்கிறவர்கள் கைகளில் வைத்திருக்கும் கம்பு கருங்காலி மரமே. கருங்காலி, செங்காலி இரண்டிலுமே அந்தக் காலத்தில் மாலைகள் செய்து அணிந்துவந்தார்கள். அதற்கு அதன் மருத்துவப் பயன்பாடே முக்கிய காரணம் எனலாம்.

இரண்டு மரங்களுமே வயிற்றில் ஏற்படும் நச்சுத்தன்மையைப் போக்கும் சக்தி கொண்டவை. எனவே பயணம் செய்யும்போது வயிற்று உபாதைகள் ஏற்பட்டால் அந்த மாலையின் மணிகளைத் தண்ணீரில் தொட்டு அரைத்து உட்கொண்டால் குணம் உண்டாகும். இதற்காகவே இந்த மாலைகளை அணிந்துகொண்டு பயணம் செய்தனர். மேலும் சிறு குழந்தைகள் விளையாடும் மர பொம்மைகளும் பெரும்பாலும் இந்த இரண்டு மரங்களிலுமே அந்தக் காலத்தில் செய்யப்பட்டன. குழந்தைகள் பொதுவாக விளையாடும்போது பொம்மைகளைக் கடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்போது அவர்கள் வயிற்றுக்குள் இந்த மரத்தின் சாறு செல்ல வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு வயிற்று உபாதை ஏற்படாமல் தடுக்கப்படும்.
இப்படிப் பல காரணங்களுக்காகவே கருங்காலி மற்றும் செங்காலிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று இவை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. நம் மரபில் ஸ்படிகம் மற்றும் ருத்திராட்சம் அணிந்துகொள்வதுவே பெரும்பாலும் வழக்கம்.
சிவனடியார்கள் ருத்திராட்சத்தை சிவனின் வடிவமாகவே காண்கிறார்கள். அதனால்தான் அதை அணிந்துகொள்வதை தெய்விகமாகக் கருதுகிறார்கள். ருத்திராட்சமும் சில மருத்துவ குணங்களைக் கொண்டவை. ருத்திராட்சத்தைத் தாண்டிய சக்தி பிறவற்றுக்கு இருக்கும் என்று சொல்லியிருந்தால் சித்தர்கள் அதையே முதன்மையாகப் பயன்படுத்தச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு மரத்துக்கும் சிறப்புகளைச் சொல்லியிருப்பதைப் போல கருங்காலிக்கும் செங்காலிக்கும் சொல்லியிருக்கிறார்களே தவிர்த்து ருத்திராட்சத்தைவிட உயர்வாக இவற்றைச் சொல்லவில்லை.
மேலும் தற்போது சந்தையில் விற்கப்படும் மாலைகள் அனைத்தும் உண்மையான கருங்காலி மரத்தில் செய்யப்பட்டனவா என்கிற சந்தேகமும் உள்ளது. எனவே ஆன்மிக அன்பர்கள் ஆன்மிக ரீதியான பலன்களை அடைய ருத்திராட்சம் அணிவதே போதுமானது. மேலும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது விதி வசத்தால் உருவாவது. அதை எந்த மாலை அணிவதன் மூலமும் பெற்றுவிட முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்” என்றார் மு. அரி.