“அரசியல் சாசனத்தைக் காப்பதும், மாநிலத்தில் சட்டத்தை மீறிய நிகழ்வுகளை தட்டிக்கேட்பதும் ஆளுநர்களின் கடமை” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வருகை தந்தார். சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா முடிந்ததையொட்டி, அங்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆன்மிகம் மட்டும்தான் தனி நபர் ஒழுக்கத்தை, பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைக்கோடியில் இருக்கும் மனிதருக்கும் உதவும் எண்ணத்தை வளர்க்கும். சேலம் மாநகரின் மகத்தான பாக்கியம் கோட்டை மாரியம்மனின் பலம்தான். காலத்தைக் கடந்து சேலம் வெற்றிகரமான நகரமாக மாநகரமாக உயர்ந்து நிற்கிறது. எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும். சேலம் நகரம் சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக மாற வேண்டுமென்று மாரியம்மனின் திருவடிகளை பணிந்து வேண்டுகிறேன். நல்லதே நடக்கும்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, உதயநிதியின் சனாதனத்திற்கு எதிரான பேச்சு குறித்துப் பேசிய அவர், “சனாதனத்தை ஒழிப்பதற்கு உதயநிதிக்கு முன்பாக எத்தனையோ மகத்தான முகலாய மன்னர்கள் எல்லாம் முயன்றிருக்கிறார்கள். கூர்வாள் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அதில் எல்லாம் ஒழியாத சனாதனத்தை உதயநிதியால் ஒழிக்க முடியாது. நிச்சயமாக இதை ஒரு கேலிக்கூத்தாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். ஆம் ஆத்மியை விட்டு வெளியே வர வேண்டும். நிதிஷ் குமாரை கைகழுவ வேண்டும். இவருக்கு என்ன அரசியல் ஞானம் இருந்து இதை சொன்னார் எனத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொல்லி இருக்கிறது என்பதை கோடிட்டு பார்க்க வேண்டும். நான் ஒன்றைச் சொல்கிறேன். கவர்னருடைய முதல் கடமை அரசியல் சாசனத்தைக் காப்பது. அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதைக் கிடப்பில் போட வேண்டியதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பதும், அட்டர்னி ஜெனரல் கருத்தைக் கேட்பதும் நிச்சயமாக ஒரு கவர்னரின் கடமையாகும். நான் சார்ந்திருக்கிற ஜார்க்கண்ட் மாநிலத்தில்கூட சில விஷயங்கள் நடந்தன. நான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றக் கருத்திற்கு மாறாக 77 சதவிகிதம் என்கிற இட ஒதுக்கீட்டை தருகிறபோது, இட ஒதுக்கீட்டின் மீது அளப்பரிய பற்று இருந்தாலும், அதை அங்கீகாரம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. முதலமைச்சர்தான் அரசை நடத்துகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற காரணத்தினாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை.

ஆளுநர் பதவி தேவையற்றது என தி.மு.க-வினர் அடிக்கடி சொல்கிறார்கள். 10 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க எத்தனை முறை ஆளுநர் பதவியை ஒழிக்க முயன்றது… இன்றைக்கு சொல்கிறார்களே இந்த அமைச்சர்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எப்படி அமைச்சர் பதவிக்கு தகுதியானார்கள் என எண்ணத் தோன்றுகிறது. `ஆளுநருக்கு கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை’ என்கிறார்கள். நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை. அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை தி.மு.க அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் தலையிடாத அளவிற்குச் சட்டங்களை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக ஆளுநர்கள் துணை நிற்போம். உங்களோடு இருப்போம். நீங்கள் கொலைகாரர்களை கட்டிப்பிடிக்கிறீர்கள். வெடிகுண்டு வீசுபவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என ஊர்வலம் போகிறார்கள். அதை வேடிக்கை பார்ப்பதாக ஒரு மாநில அரசாங்கம் இருக்கிறது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம்கூட நிறைவேற்றுகிறார்கள். இதெல்லாம் அமைதியை வளர்க்கிற போக்கா… இதை தட்டிக்கேட்காமல் எதற்காக கவர்னர் பதவி?” என்றார் ஆவேசமாக.