இலங்கையில் ‘நியாயமான வர்த்தகக் கருத்தை’ மேம்படுத்துவதற்காக நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் (International Fair Trade Network) பங்குதாரர்களுடன் இணைந்து செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை முன்மொழியப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
International Fair Trade Network என்பது, தரநிலை சான்றிதழ், தயாரிப்பு, திட்டங்கள் மற்றும் ஆலோசனை ஊடாக நன்மைகளை சமமாக விநியோகிக்கும் உலகலாவிய வலையமைப்பு ஆகும். சர்வதேச ரீதியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பல நிறுவனங்கள் நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் பங்காளர்களாக செயலாற்றுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘நீதியான வர்த்தகம்’ மற்றும் ‘வர்த்தக நியாயத்திற்கு’ ஒத்துழைப்பு வழங்கும் கொள்கைக்காக ஆலோசனை வழங்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கும், அத்துடன் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு செல்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு இயலுமை உண்டு. இலங்கையில் ‘நீதியான வர்த்தகக் கொள்கையை’ ஊக்குவிப்பதற்காக நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் பங்காளர்களுடன் இணைந்து செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை முன்மொழிந்துள்ளது. அதற்கமைய, நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பு மற்றும் இலங்கைக்கும் இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் ‘ஒத்துழைப்புச் சட்டகத்தில்’ கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்