போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் தலைநகர் போபாலில் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அரேரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பழைய சிறையில் எண்ணப்பட உள்ளன. இந்த மையத்தில் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இதுகுறித்து போபால் காவல்துறை ஆணையர் ஹரிநாராயண்சாரி மிஸ்ரா கூறியதாவது:
போபால் பழைய சிறையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாக்கு எண்ணும் நாளில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்புக்காக 200 போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ட்ராங் ரூமின் உள்ளேயும் வெளியேயும் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் அப்பகுதி தொடர்ந்து கண்காணிப்படுகிறது. காவல் துணை ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரிகள் 8 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் நாள் முழுவதும் கண்காணிக்கின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.