காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு

 

  • காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு COP28 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பாராட்டு.

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை”   (02) முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth) ஆகியோரின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மேற்படி யோசனையை முன்மொழிந்தார்.

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இது அரசாங்களினால் மாத்திரம் முன்னெடுக்ககூடிய செயற்பாடு அல்லவென்றும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் அதிகமான தொகை இஸ்ரேல் மற்றும் காஸா எல்லைகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றங்களுக்காக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வாகவே காலநிலை நீதிமன்றத்தை முன்மொழிந்திருப்பதால், அதனுடன் இணைந்துகொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இலங்கை முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான பங்குதாரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐரோப்பிய சங்கத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒன்கர் அண்டர்சன், காலநிலை அனர்த்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு அவசியமான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முயற்சிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக காலநிலை நீதிமன்றம் செயற்படும் என்றும் அதனை வரவேற்பதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல

காலநிலை அனர்த்தங்களுக்கு வலுவாக ஈடுகொடுப்பதற்கு காலநிலை நீதிமன்றம் போன்ற முன்னெடுப்புக்கள் அவசியம் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான தற்போது முன்னெடுக்கப்பட்டும் கலந்துரையாடல்களுக்கு மேலதிகமான பல்வேறு முயற்சிகள் அவசியப்படுகின்றன. நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய களத்தை அமைப்பதற்காக காலநிலை நீதிமன்றம் தொடர்பான யோசனையை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் உள்ளடக்கவுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth)

காலநிலை நீதிமன்றத்தை அன்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு, இதன்மூலம் வலுவான தலைமைத்துவத்தை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, மதுர விதானகே, அஜித் மானப்பெரு, எம்.ரமேஸ்வரன் ஆகியோருடன் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.