ஹைதராபாத்: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வியை தழுவியுள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சந்திரசேகர் ராவ். அவரது ராஜினாமாவை அம்மாநில ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியாக உள்ள பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இதில் மக்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சந்திரசேகர் ராவ். இது குறித்து அம்மாநில ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சந்திரசேகர் ராவ், இன்று (டிச.3) ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதோடு புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரையில் பதவியில் தொடரும் படி அவரிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ல் உதயமான தெலங்கானா மாநிலத்தில் 2014 மற்றும் 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்தது. அதன் காரணமாக பிஆர்எஸ் கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ், முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார். 2023 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.