சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை, பலத்த காற்றால் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று காலை 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 4.30மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்,காலை 8.55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், துபாய் விமானங்கள்: அதேபோல, சிங்கப்பூர், துபாய்,ஷார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் 7 விமானங்கள், துபாய், மும்பையில் இருந்து வரும் 2 விமானங்கள் உட்பட மொத்தம் 30 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
விமான பயணிகள் முன்னதாகவே, அவர்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்பாடு, வருகை குறித்துதெரிந்து கொண்டு, அதற்கு ஏற்பதங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமானநிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.