சிவகாசி: படிக்கச் சொல்லிக் கண்டித்த ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு – வகுப்பறைக்குள் நடந்த பயங்கரம்!

படிக்கச் சொல்லிக் கண்டித்ததற்காகப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை, 16 வயது மாணவர்கள் இருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தபோது, நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பொருளாதாரத்துறை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர், கடற்கரை ராஜ் (வயது 42). பள்ளிகளில் அடுத்த வாரம் அரையாண்டு தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்களை ஒழுங்காக படிக்கச் சொல்லி ஆசிரியர் கடற்கரை ராஜ் அறிவுரை வழங்கியிருக்கிறார். அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவர்கள் இருவரை, கூடுதல் கவனத்துடன் படித்து பரீட்சை எழுதவேண்டுமெனச் சொல்லி, ஆசிரியர் கண்டித்திருக்கிறார்.

விசாரணை

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், ஆசிரியரை கொலைசெய்யும் நோக்கில் அரிவாளால் வெட்ட முற்பட்டிருக்கின்றனர். அதன்படி, இன்று முற்பகலில், இடைவேளை நேரத்தின்போது வகுப்பறையில் தனது மேசைக்கு அருகே தனியே ஆசிரியர் கடற்கரை ராஜ் அமர்ந்திருந்தபோது, ஒரு மாணவர் கையில் அரிவாளுடனும், மற்றொருவர் கூர்மையான கத்தியுடனும் உள்நுழைந்திருக்கின்றனர். இதைப்பார்த்த அதிர்ச்சியிலிருந்து ஆசிரியர் கடற்கரை ராஜ் மீள்வதற்குள், அவரை மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆசிரியர் கடற்கரை ராஜுக்குத் தலையில் வெட்டுக்காயம் விழுந்தது. அடுத்த வெட்டு விழுவதற்குள் சுதாரித்துக்கொண்ட அவர், சத்தம் போடவும்… பள்ளியில் குழுமியிருந்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஓடிவந்திருக்கின்றனர். இதனால் அச்சமடைந்த மாணவர்கள், வகுப்பறையிலிருந்து வெளியேறி காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

காயத்துடன் ஆசிரியர்

இதைத் தொடர்ந்து, கடற்கரை ராஜ் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர் கடற்கரை ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

பட்டப்பகலில் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த இந்தச் சம்பவம், விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.