ஒவ்வொரு முறையும் புயல் அபாயத்தின் போது சென்னை நீருக்குள் மூழ்கி மீள்கிறது. புயல் எச்சரிக்கையின் போது முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதிப்பு என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது.
தற்போது `மிக்ஜாம்’ புயல் சென்னையை புரட்டி போட்டிருக்கிறது. வழக்கத்தைவிட 29 சதவிகித மழை பெய்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் இன்னும மழைநீர் வடியவில்லை.

செம்பரம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம் இன்னும் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் நிரம்பி வழிகிறது. வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கும் பணிகளையும் தீவிரமாக அரசு மேற்கொண்டு வருகிறது.
மழைநீரில் பாம்புகள், பூரான்கள் மற்றும் சில இடங்களில் முதலைகளின் நடமாட்டம் தென்படுவதால் தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெருமழையின் போதும், புயலின்போதும் மூழ்கிப்போகும் சென்னைக்கு தீர்வு தான் என்ன என்பது குறித்து முன்னாள் மூத்த பொறியாளர் (பொதுப்பணித்துறை) முனைவர் வீரப்பனிடம் பேசினோம்…
“சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 10 லட்சமாக இருந்த இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 3 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் 1980-ல் சென்னையின் மொத்த பரப்பளவில் 15 சதவிகிதம் மட்டுமே கான்கிரீட் கட்டடங்களாக இருந்தன. 85 சதவிகிதம் திறந்தவெளி நிலங்கள் இருந்தன. இதனால் மழை பெய்தால் மழை நீர் தேங்காமல் அருகிலுள்ள காலி நிலங்களுக்குள் ஓடிவிடும் அல்லது மண்ணுக்குள் சென்றுவிடும்.

2020-ம் ஆண்டு சென்னையின் பரப்பளவில் 85 சதவிகிதம் கான்கிரீட் கட்டடங்கள் இருக்கின்றன. அதிலும் பல அடுக்குமாடிக் கட்டடங்களாக இருக்கிறது. மீதமிருக்கும் 15 சதவிகித இடமே திறந்தவெளி நிலமாக இருக்கிறது.
பெய்யக் கூடிய மழை நீர் வழிந்து ஓடுவதற்கு வசதி இல்லை. பள்ளமாக இருந்த இடங்களிளெல்லாம் நாம் ஏரிகளைச் சேர்த்து கட்டடங்களாகக் கட்டி இருக்கிறோம்.
சென்னையின் மக்கள் தொகையும் 1 கோடிக்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் குப்பைகளை நிரப்பி மூடிவிடுகிறார்கள். எனவே ஒரு மணிநேர மழைக்கே சென்னை மிதக்கிறது.
ஒரு குடியிருப்பில் எத்தனை அடுக்குமாடிகள் கட்டலாம் என்று நிர்ணயிக்கக்கூடிய `Floor Space Index’-ன் எண்ணிக்கையும் சமீப காலத்தில் உயர்ந்திருக்கிறது. இதனால் 10 மாடி, 20 மாடி என அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்து இருக்கின்றன.
அங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அதோடு மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகத்திருக்கிறது. இதனால்தான் சென்னையில் மக்கள், வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
எனவே இனிமேல் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரு கட்டடம் கூட கட்டக்கூடாது என்ற நிலை வரவேண்டும்.
சென்னையில் 1,200 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் வடிவமைப்பு சரியாக இல்லை, செயல்பாடும் சரியாக இல்லை. உயர்மட்டத்தில் இருந்து தாழ்மட்டத்திற்குச் செல்வது போன்று வடிகால் பாதைகள் செல்லவில்லை. அதேபோன்று மழைநீர் வடிகால் பாதைகள் பெரிய கால்வாய்களோடோ, ஆற்றிலோ இணைக்கப்படவில்லை.

மழைநீர் வடிகால்களுக்குச் செவ்வக அல்லது சதுர கான்கிரீட்டை வைக்காமல் ஒன்றரை அல்லது இரண்டு மீட்டர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் குழாய்கள் (Reinforced concrete pipe – RCP) வைக்கப்பட்டுள்ளன. இதனால் எளிதில் தண்ணீர் வடியவில்லை.
இங்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான திட்டமிடுதலில் தவறு உள்ளது; மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் கையில் இல்லாமல் துறைசார் வல்லுநர்களின் கட்டுப்பாட்டுக்குள் மழைநீர் வடிதல் சம்பந்தமான பிரச்னைகள் கொண்டுவரப்பட வேண்டும். இதை சரிசெய்யாவிட்டால் இந்தப் பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.