கயானாவிடம் உள்ள எஸ்சிகிபோ எங்கள் பகுதி.. வெனிசுலாவில் பொது வாக்கெடுப்பு: 95% ஆதரவு

வெனிசுனாவின் அண்டை நாடு கயானா. இந்த நாட்டின் எண்ணெய்வளம் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த எஸ்சிகிபோ பிராந்தியம் மீது வெனிசுலா உரிமை கொண்டாடுகிறது. இதற்காக சர்வதேச நடுவர் மன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எல்லை வரையறுக்கப்பட்டபோது, அந்த பகுதியானது தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது என்றும், அந்த பகுதியை 1899ஆம் ஆண்டு கயானாவை ஆண்ட காலனி ஆதிக்க சக்தியான பிரிட்டனுக்கு வழங்குவதற்கு சர்வதேச நடுவர் மன்றம் எடுத்த முடிவு நியாயமற்றது என்றும் வெனிசுலா நீண்டகாலமாக கூறி வருகிறது.

வெனிசுலா உரிமை கோரும் இந்த பிராந்தியம் 159,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது தற்போது கயானாவின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

இந்த நிலப்பரப்பின் மீது உரிமை கோருவதற்காக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசு மக்களிடம் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதில், பிராந்திய உரிமை கோரலுக்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர். எஸ்சிகிபோ பிரதேசத்தில் ஒரு புதிய வெனிசுலா அரசை நிறுவுவதற்கு 95 சதவீத மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாக்கெடுப்பு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

எஸ்சிகிபோ பிராந்தியத்தை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கயானாவும் அதற்கு முன் பிரிட்டிஷ் கயானாவும் நிர்வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.