விஜயபுரா ;விஜயபுராவில் மக்கா சோளம் பதப்படுத்தும் ஆலையில், மூட்டைகள் சரிந்ததில் ஏழு தொழிலாளர்கள் பலியாகினர்.
விஜயபுரா நகரின் புறநகர் பகுதி தொழிற்பேட்டையில், ராஜகுரு இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இங்கு மக்கா சோளம் பதப்படுத்தப்பட்டு வருகிறது. பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் மக்கா சோள மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மூட்டைகள் சரிந்தன. இதில், 11 தொழிலாளர்கள் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள், நான்கு பேரை மீட்டனர்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மூட்டைகள் இடையே சிக்கிய ஏழு தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள், பீஹாரை சேர்ந்த ராஜேஷ் முகியா, 25, ரம்ப்ரிஸ் முகியா, 29, ஷம்பு முகியா, 26, லுகோ ஜாதவ், 45, ராம்பாலக், 52, என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று காலையில், கிருஷ்ணகுமார், 28, குலால் சந்த் முகியா, 40, ஆகிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
பெலகாவி கூட்டத்தொடரில் இருந்த நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த அவர், அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இச்சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றும் போது, விபத்து ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளிப்போம்.
இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.,யிடம் தகவல் பெற்றுள்ளேன். முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். உரிமையாளர்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொழிலாளர்கள், ‘இதுபோன்று ஏற்கனவே நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்’ என்று கூறினர். அவர்களை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சமாதானம் செய்தார்.
எஸ்.பி., ரிஷிகேஷ் சோனான் கூறுகையில், ”ஏழு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. விபத்துக்கு பொறுப்பான கிடங்கின் உரிமையாளர், ஏ.பி.எம்.சி., ஸ்டேஷன் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.
கிடங்கு உரிமையாளர் கிஷோர் குமார் ஜெயின், ”இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும்; காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும்,” என்றார்.
***
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்