மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தளிக்கிறது தலைநகர் சென்னை. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து பாடம் கற்றாலும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மட்டும் கிடைத்த பாடில்லை. மழை நின்று சில தினங்களாகியும் இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது. நீர் வடியவில்லை, உணவில்லை, மின்சாரம் வரவில்லை… இத்தகைய துயரில் தவிக்கும் தன் பகுதி மக்களுக்குப் படகில் சென்று உணவு கொடுத்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் கலா. ‘சிறுதுளி பெருவெள்ளமாக’ இந்தச் சிறிய உதவியும் அப்பகுதி மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், கலாவிடம் பேசினோம்.

“நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி பகுதியில வசிக்கிறேன். எங்க வீடு கொஞ்சம் மேடான பகுதியில இருந்தாலும்கூட மழைநீர் காம்பவுண்ட் வரைக்கும் வந்திடுச்சு. அதனால, எங்களுக்குப் பெரிசா பாதிப்பில்லை. எங்க வீட்டுக்கு பின்பகுதியில இடுப்பளவுக்கு மழைநீர் சூழ்ந்திடுச்சு. அதனால, நிறைய மக்கள் பரிதவிப்போட பாதுகாப்பான இடங்களுக்குப் போனாங்க. அந்த நேரத்துல என் கார்ல நிறைய பேரை மேடான பகுதிக்குக் கொண்டுபோய் விட்டேன். நேத்துதான் எங்க பகுதியில நீர் வடிஞ்சு, கரன்ட் வந்துச்சு. எங்க வீட்டுக்குப் பின்னாடி பல பகுதிகள்ல இன்னும் நீர் வடியாத நிலையில, பலரும் அடிப்படை உதவிகள் கிடைக்காம சிரமப்படுறது தெரிஞ்சது.
கீதம் ரெஸ்டாரென்ட் ஓனர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார். அவர்கிட்டயும், பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர்கிட்டயும் உதவி கேட்டேன். அவங்களும் உடனே உதவினாங்க. நேத்து நைட் 800 பேர் சாப்பிடுற மாதிரி பார்சல் சப்பாத்தி வாங்கினோம். தெரிஞ்ச பசங்க படகு இருக்குனு சொல்லவே, நானே நேர்ல போனேன். படகுல நான் உட்கார்ந்துக்க, வாலன்டியரா வந்த பசங்க மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்துல எங்கிட்ட இருந்து ஃபுட் பார்சலை மக்களுக்குக் கொடுத்தாங்க. இந்த சின்ன முயற்சியால சிலரின் பசியைப் போக்க முடிஞ்சது. இன்னிக்கு சிலருக்கு பால் பாக்கெட் கொடுத்தோம்.

‘பசிக்குது… ஏதாச்சும் சாப்பிட கொடுங்க’னு மக்கள் தவிப்போடு சொன்னப்போ கண்ணீர் முட்டிடுச்சு. சோஷியல் மீடியா மூலமா இதைத் தெரிஞ்சுக்கிட்டு பலரும் எங்களோடு உதவி செய்ய முன்வந்திருக்காங்க. அரசாங்கம் பரபரப்பா வேலை செஞ்சாலும், இன்னும் உதவிகள் சென்றடையாத மக்கள் எக்கச்சக்கமா இருக்காங்க. வெளிச்சமில்லாம, குடிநீர் மற்றும் உணவு இல்லாம, கொசுக்கடியில தூக்கமில்லாம பலரும் தவிக்கிறாங்க. அரசாங்கத்தோட உதவிகள் முழுமூச்சா கிடைக்கிற வரைக்கும், நம்மால முடிஞ்ச உதவிகளை செஞ்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுவோம்” என்று அக்கறையுடன் சொல்கிறார் கலா.