நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் ஜெயராம் இயக்கத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கவிருக்கிறார். இவர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் ‘மா பாவா’ பாடலுக்கு நடனமாடி பெரிதும் பரிச்சயமானார். ஏற்கெனவே, நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையிலிருந்து இன்ஸ்பயராகிதான் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தித் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதில் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். இதிலிருந்து தொடங்கி பல கேள்விகளை இத்திரைப்படத்தின் இயக்குநரிடம் பேசினோம்.

மென்மையாகப் பதிலளிக்கத் தொடங்கிய இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயராம், “சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேல ஆசை இருந்தது. வேற ஒரு கரியர்ல இருந்தேன். அதுக்குப் பிறகு சினிமாதான் நம்ம களம்னு தெரிஞ்சுகிட்டு அசிஸ்டன்ட் டைரக்டராகச் சேர்ந்துட்டேன். இயக்குநர் பிஜாய் நம்பியார்கிட்ட அசிஸ்டன்டாக வேலை பார்த்திருக்கேன். ‘ஆஹா கல்யாணம்’ திரைப்படத்துல அசிஸ்டன்டாக வேலை பார்த்தேன். அப்புறம், விளம்பரங்கள், மியூசிக் வீடியோகள்ல ஒர்க் பண்ணேன். தனுஷ் நடிச்சிருந்த ‘பக்கிரி’ திரைப்படத்துக்கு நான்தான் வசனங்களைத் தமிழாக்கம் பண்ணி, டப்பிங் டைரக்ஷன் பண்ணேன். அதுமாதிரி மலையாளத்துல வெளியாகியிருந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்துக்கும் வசனங்களைத் தமிழாக்கம் பண்ணியிருக்கேன். இதுமாதிரி 8 வருஷங்களா சினிமால வேலை பார்த்துட்டு வர்றேன்” என்றார்.
இதன் பிறகு ‘சில்க் ஸ்மிதா’ பயோகிராஃபி திரைப்படம் குறித்து பேசத் தொடங்கிய இயக்குநர், “நடிகை சந்திரிகா ரவிவை சில்க் ஸ்மிதாவோட ஒப்பிட்டு சோசியல் மீடியால முன்னாடியே போட்டுட்டு இருந்தாங்க. அவங்ககிட்டையும் நிறையா பேர் சொல்லியிருக்காங்க. சில்க் ஸ்மிதாவோட லைஃப் ஸ்டோரிய படமாகப் பண்ணலாம்னு அவங்கதான் ஐடியா சொன்னாங்க.

அதே ஐடியாவைத் தயாரிப்பாளர்கிட்டையும் சொன்னாங்க. தயாரிப்பாளர்கூட நானும் சில புராஜெக்ட்ஸ் வேலை பார்த்திருக்கேன். அவங்க இந்த ‘சில்க் ஸ்மிதா’ படம் பண்றது தொடர்பாக என்கிட்ட பேசுனாங்க. அங்கிருந்து பல ரிசர்ச் வேலைகள் தொடங்குச்சு. சில்க் ஸ்மிதாவின் வாழ்கையோட முக்கியமான பக்கங்களை கவர் பண்ணணும்னு திட்டமிட்டிருக்கோம். இப்போ திரைப்படத்தோட முதற்கட்ட பணிகள் நடந்துட்டு இருக்கு. கூடிய விரைவுல திரைப்படத்தோட படப்பிடிப்பைத் தொடங்கிடுவோம்” என்றவரிடம் ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் தொடர்பான கேள்வியை முன்வைத்தோம்.
அதற்கு, “‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் சில்க் ஸ்மிதாவோட வாழ்க்கைல இருந்து இன்ஸ்பயராகி புனைவாகச் சில விஷயங்களைப் பண்ணியிருப்பாங்க. ஆனா, இத்திரைப்படம் முழுசா அவங்களோட வாழ்க்கையை டாக்குமென்ட் பண்ற மாதிரி இருக்கணும்னு திட்டம் வச்சிருக்கோம். இன்றைய தலைமுறை மக்களுக்கு சில்க் ஸ்மிதா பற்றிய எண்ணமே வேற மாதிரி இருக்கு. அதையும் தாண்டி அவங்க வாழ்க்கையில பல விஷயங்கள் இருக்கு. எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையா இருக்கு. அதுமட்டுமல்ல, நடிகர்கள் தற்கொலை பண்ற விஷயம் புதுசு கிடையாது.
அந்தக் காலத்துல இருந்தே இந்தத் தற்கொலைகள் இருந்திருக்கு. அப்போ நமக்கு மெண்டல் ஹெல்த்னு ஒண்ணு கிடையவே கிடையாது. இன்னைக்கு நிறையா விஷயங்கள் மாறியிருக்கு. நமக்கும் நிறைய விஷயங்கள் புரிஞ்சிருக்கும்.
இந்தப் படம் புதுமையான பயோகிராபியாக ரியலிஸ்டிக்காக கொண்டு வரணும்னு ஆசைப்படுறேன். சில்க் ஸ்மிதாவைக் காட்டியிருக்கிற கோணத்தையே நம்ம மாற்றியாகணும். குறிப்பாக இந்த விஷயத்துல நான் வேலை பார்த்துட்டு இருக்கேன். கேன்ல தூங்கிட்டு இருந்த படத்துல ஒரு சில்க் ஸ்மிதா பாடலைச் சேர்த்து ரிலீஸ் பண்ண பல படங்கள் இங்க இருக்கு. அதனால வாழ்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நிறையாவே இருக்கு.

அவங்கள பத்தின பல நல்ல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன். ஒரு பாயின்ட்ல சில்க் ஸ்மிதா ரொம்பவே பாவம். அவங்கள சுத்தி இருந்த ஆணாத்திக்கத்துனால பல விஷயங்களில் பின்னடைவைச் சந்திச்சிருக்காங்க. இந்த விஷயத்தை நான் அழமாகப் புரிஞ்சுகிட்டேன். அவங்க நடிகையாகணும்னுதான் ஆசைப்பட்டாங்க. அதான் சில படங்களில் பாடல்கள் மட்டுமில்லாம சில சீன்களிலும் வருவாங்க. அவங்களை சினிமாவும், சினிமா வட்டாரமும் சரியாக நடத்தல. பர்சனல் லைஃப்ல அவங்களோட சாதாரணமான தேவைகள்கூட பூர்த்தியாகல. இதையெல்லாம் இந்தப் படம் பேசும்!” எனப் பேசி முடித்தார்.