ஹிங்குராங்கொட விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்து அதன் அருகாமையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளதாகவும், அடுத்த வருடம் அது நடைமுறைப்படுத்தப்படும் எனறும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் சிறிய மைதானங்களை நிர்மாணிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிதத் வெத்தமுனி, அரவிந்தத சில்வா மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும் இடத்தில் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்படுவது விசேடமான விடயமாகும். இதனால், விளையாட்டு சுற்றுலாவுக்கு தனி இடம் கிடைக்கும். 2024ம் ஆண்டுக்குள் அந்த விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்து முடிக்க எதர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.