மாடர்ன் தியேட்டர்ஸ்: கருணாநிதி சிலை விவகாரம்; ஆட்சியரைக் குற்றம்சாட்டும் உரிமையாளர்- என்ன நடக்கிறது?

தமிழகத்தில் திரையுலகுக்குப் பேர்போன மாவட்டம் என்றால், மாங்கனி மாவட்டமான சேலத்தைத்தான் கூறுவார்கள். அதேபோல எண்ணிக்கையில் சேலத்திலிருந்தது போன்ற திரையரங்குகள், தமிழகத்தில் எங்கும் இருந்தது கிடையாது. 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்திருக்கின்றன. அதற்கான ஓர் ஆதாரமாக இன்றும் இருந்துவருவது, சேலத்தில் சினிமா நகர் என்ற பகுதி. இத்தனை சிறப்புகளெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும்விட மிகச் சிறப்பம்சம்கொண்ட ஒன்றாக தமிழக அரசியலில் பல நடிகர்களையும், கதாசிரியர்களையும் திரையுலகின் மூலம் அரசியல் வாழ்க்கைக்குக் கொண்டுவந்து முதல்வராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸும் இங்குதான் அமைந்திருக்கிறது. இங்கு முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஜானகி உள்ளிட்டவர்களும் பணியாற்றியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி வரலாறு கண்டு வியக்கக்கூடிய மாடர்ன் தியேட்டர்ஸ் இன்று இருக்கிறதா என்றால், இல்லை. காரணம், டி.ஆர்.சுந்தரத்துக்குப் பிறகு வந்தவர்கள், அந்த இடத்தை தனியாருக்கு விற்றுவிட்டனர். இப்போதைக்குச் சம்பந்தப்பட்ட இடத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இல்லை. அதற்கு பதிலாக நுழைவாயில் வளைவு மட்டும்தான் இருந்து வருகிறது. அங்குதான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலத்துக்கு வருகை புரிந்திருந்தபோது, மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு நின்று தன்னுடைய தந்தையின் நினைவாக இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் இருப்பதாகக் கூறி, செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர், `முடிந்தால் இதை அரசின் பாதுகாப்புக்குக்கீழ் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அளவீடு செய்தனர். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயில் வளைவு நெடுஞ்சாலைத்துறையின் இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தில் அளவுக்கல் நட்டனர். இதனால் அந்த இடத்தின் தற்போதைய உரிமையாளரான விஜயவர்மன், “நுழைவுவாயில் என்னுடைய பட்டா நிலத்தில் வரும்போது, அதை நெடுஞ்சாலைத்துறை எப்படி உரிமை கொண்டாட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அதையடுத்து, மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. “முதலமைச்சர்தான் தன்னுடைய தந்தையின் நினைவாக, அந்த இடத்தில் சிலைவைக்க இது போன்ற விஷயங்களைச் செய்துவருகிறார்” என்று பேச்சு எழுந்தது.

இது குறித்து அந்த நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர், “மறைந்த திரைப்படக் கலைஞர் டி.ஆர்.சுந்தரத்திடமிருந்து என்னுடைய தந்தை இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார். அதன் பிறகு இந்த இடத்திலிருந்த மாடர்ன் தியேட்டர்ஸை இடித்துவிட்டு, பாதி நிலத்தை விற்பனை செய்துவிட்டோம். தற்போது 2,500 ச.அடி நிலம் மட்டும், இந்த நுழைவாயிலுக்குப் பின்னால் இருந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னுடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதுவரையிலும் இந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலை இடிக்காமல் பாதுகாத்துவருகிறோம்.

விஜயவர்மன்

இதற்கிடையில் தற்போதைய முதல்வரும், `எங்களிடம் சம்பந்தப்பட்ட இடத்தைத் தர விருப்பம் இருந்தால் கொடுங்கள், கட்டாயப்படுத்தவில்லை’ என்று தெரிவித்திருந்தார். நானும் வீட்டில் கலந்தாலோசித்து பதிலளிப்பதாகக் கூறியிருந்தேன். இதற்கிடையில்தான் மாவட்ட ஆட்சியரான கார்மேகம், என்னைப் பலமுறை நேரில் அழைத்து, `முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை அங்கு வைக்க வேண்டும்’ என நிலத்தைக் கேட்டுப் பேசினார். நானும் `கொஞ்சம் பொறுமையாக இருங்கள், கண்டிப்பாக வீட்டில் பேசி முடிவெடுக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் மாவட்ட ஆட்சியர், ஒருகட்டத்தில் அஸ்தம்பட்டி, கோரிமேடு அருகே அமைந்திருக்கும் எனக்குச் சொந்தமான இடத்தை, குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான இடம் என்று கூறி, அங்கிருந்த கட்டடங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தகர்த்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திடீரென வந்து, சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, அந்த இடத்தை மட்டும் அளந்து எனது பட்டாவில் இருக்கும் நுழைவாயிலை நெடுஞ்சாலைத்துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி, அளவுக்கல் நட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். இப்படி எனக்கு அடுத்தடுத்து மன உளைச்சலையும், பிரச்னையையும் மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்திவருகிறார்” என்றார்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “நான் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் தொடர்பாக யாரையும் மிரட்டவும், பழிவாங்கவும் இல்லை. இது முழுவதும் நெடுஞ்சாலைத்துறைக்கு உரிய இடம் என்பது அளவீடு செய்யும்போது தெரியவந்தது.

கார்மேகம்

அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துவிட்டுத்தான், அளவீடு கல் புதைத்தோம். ஏற்கெனவே வாங்கிய டவுன் பிளானிலுள்ள நிலத்துக்கான பாதையை விற்றுவிட்டு, இப்போது அரசிடம் பாதை கேட்டால் எப்படித் தர முடியும்… அதேபோலத்தான் குடிசை மாற்று வாரியத்தில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்துக்கும் அவருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உரிய விளக்கங்கள் அளித்திருக்கிறது. அதையும் மீறிச் செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அவரைக் கைதுசெய்யவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் தற்போது இந்த விவகாரத்தில் அண்ணாமலை போன்ற சில அரசியல் கட்சியினர், சரியான விவரம் இல்லாமலும், புரிதல் இல்லாமல் விமர்சித்துவருகின்றனர். இதில், அரசின் நிலத்தை மீட்டெடுப்பதில் எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.