டெல் அவிவ்,
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து நடத்திய திடீர் தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் பலியாகினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்., 7ல் திடீர் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போர், இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. இதில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
அதேசமயம், பாலஸ்தீனர்கள் தரப்பில் 18,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தப் போரில், வடக்கு காசா முற்றிலும் உருக்குலைந்துள்ள நிலையில், தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேலிய படை தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். ‘சர்வதேச நாடுகளின் ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ போர் தொடரும்’ என, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், காசாவின் ஷிஜாயா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இஸ்ரேல் வீரர்கள் மீது, அங்கு பதுங்கியிருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேல் ராணுவ படையின் மூத்த தளபதி உட்பட ஒன்பது வீரர்கள் பலியாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement