ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 சீசன்களாக கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா 5 முறை அணிக்காகக் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம். ரோஹித் சர்மாவுக்கு அந்த அணி செய்திருப்பது மிகப்பெரிய அவமரியாதை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது சரியான முடிவுதான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த விஷயத்தில் நாம் சரி, தவறு என்று எதையும் பார்க்கக்கூடாது. ஆனால் இந்த முடிவு அணிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் குறைந்திருக்கின்றன. அவர் அதிரடியாக ரன்களைக் குவிப்பார். ஆனால் சமீப காலங்களில் அவர் சிறப்பாகச் செயல்படாததாலேயே கடந்த 2 வருடங்களாக மும்பை 9வது, 10வது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த வருடம் போராடி பிளேஆஃப் வரை மட்டுமே சென்றது. அந்த வகையில் ஆரம்பக் காலங்களில் அட்டகாசமாக விளையாடிய ரோஹித் சர்மாவை ஏனோ சமீபத்திய ஐ.பி.எல் தொடர்களில் நம்மால் பார்க்க முடியவில்லை.

ஐ.பி.எல் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைப்படைந்திருக்கலாம். மறுபுறம் குஜராத்துக்கு முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்டியா 2வது வருடமும் ஃபைனல் வரை அழைத்துச் சென்றதால்தான் மும்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பைக்கும் தற்போது புதுமையாகச் சிந்திக்கக் கூடிய ஒருவர் தேவைப்படுகிறது” என்று கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.