காரைக்கால் : திருநள்ளாறில் இன்று நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா இன்று 20ம் தேதி, மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசியில் பிரவேசிக்கிறார்.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளுக்கு பிஸ்கெட், பேரிச்சை பழம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 120 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி
பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 130 சி.சி.டி.வி. கேமரா நிரந்தரமாகவும், 36 கேமராக்கள் தற்காலிகமாகவும் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடக்கிறது.
திருநள்ளார் கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் முன்னதாக நகராட்சி சந்தை திடல், தேவஸ்தான பஸ் நிறுத்தம், தேனுார் சந்திப்பு, அம்பகரத்துார் சாலை, நெடுங்காடு சாலை என 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிறுத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 20 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
நளன் குளம்
பக்தர்கள் நளன் குளத்தில் குளித்துவிட்டு, சனீஸ்வர பகவானை தரிசப்பது வழக்கம். சிறுவர்கள் குளிப்பதிற்கு ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தரிசனம்
சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய தர்ம தரிசனம் மற்றும் 3 கட்டண தரிசனம் வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட் பெற கோவிலை சுற்றி 18 இடங்களில் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 300, 600, 1000 கட்டண தரிசன டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. தரிசன டிக்கெட்டை கார் பாஸ்சாகவும் பயன்படுத்தலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்